| ADDED : மே 13, 2024 05:22 AM
சென்னை : உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 65 கோடி ரூபாய் மதிப்பிலான 21 கிரவுண்ட் நிலத்தை பாதுகாக்க, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு, பாலவாக்கம் வி.ஜி.பி., கோல்டன் சீவியூ குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் அனுப்பியுள்ள கடித விபரம்:கடந்த 1975ம் ஆண்டு உருவாக்கப்பட்ட எங்களது குடியிருப்பு பகுதியில், 21 கிரவுண்ட் மற்றும் 1,525 சதுர அடி நிலம், பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.இந்த இடத்தை, 1993ம் ஆண்டு விற்பனை செய்ய ஏற்பாடு நடந்தது. இதில் எட்டு வீட்டு பிளாட்கள் விற்கப்பட்டன. இதை எதிர்த்து, சங்கத்தின் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, பொதுப்பயன்பாட்டிற்கான நிலத்தை பாதுகாப்பதற்கு, மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது.இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் அனுப்பியுள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த 21 கிரவுண்ட் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 65 கோடி ரூபாய் ஆகும். நாங்கள், சட்ட போராட்டம் நடத்தி மீட்ட நிலம், மாநகராட்சிக்கு சொந்தமானது. எனவே, இந்த இடத்தை பாதுகாப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.