| ADDED : ஜூலை 27, 2024 07:08 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கணேசா நகரில், தும்பவனம் மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், 39வது ஆண்டு விழா, நேற்று காலை 7:00 மணிக்கு வரசக்தி விநாயகருக்கு அபிஷேகத்துடன் துவங்கியது.காலை 9:00 மணிக்கு தும்பவனம் மாரியம்மனுக்கு 108 பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், பம்பை, உடுக்கை மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க, பல்வேறு முக்கிய வீதி வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது.தொடர்ந்து, அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. மதியம் 12:10 மணிக்கு மூலவர் அம்மனுக்கு மஹாதீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு ஜலம் திரட்டும் நிகழ்வும், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது.இன்று மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 8:30 மணிக்கு அன்ன தானமும் நடைபெறுகிறது. நாளை காலை 7:00 மணிக்கு வரசக்தி விநாய கருக்கும், தும்பவனம் மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் விழாவும், இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் தும்பவனம் மாரியம்மன் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.இரவு 10:00 மணிக்கும் கும்பம் படையலிடப்பட்டு, அம்மன் வர்ணிப்பு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கணேசா நகர், எம்.பி.டி., நகர் இளைஞர் அணி, பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.