| ADDED : மே 06, 2024 03:41 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், ஆற்பாக்கத்தில் திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் தக்கார், கிராமத்தினர், ஹிந்து சமய அறநிலைய துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் ஆணையர் வான்மதி, அரசு விதிகளுக்கு உட்பட்டு திருப்பணியை துவக்க அனுமதி வழங்கினார். பாலாலயத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை, யாகசாலை அமைக்கப்பட்டு, 22க்கும் மேற்பட்ட திருக்குடங்கள் நிர்மாணிக்கப்பட்டு முதற்கால யாக சாலை பூஜை நிறைவு பெற்றது.நேற்று, காலை 6:00 மணிக்கு சிவாச்சாரியார் ராஜா குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் இரண்டாம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று திருக்குடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து அத்தி மரத்திலான திருவாலீஸ்வரருக்கு புனித நீர் ஊற்றி யாகசாலை பூஜை சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் திருவாலீஸ்வரர், தீப தூப ஆராதனை நடந்தது.