| ADDED : மே 13, 2024 05:56 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, திம்மசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 39; சாலவாக்கம் இந்தியன் வங்கி ஊழியர். விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட இவர், விளையாட்டு முக்கியத்துவத்தை அனைவரும் உணர, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஹாக்கி மட்டையை, ஒரே விரலில் செங்குத்தாக நீண்டநேரம் நேர்நிறுத்தி பேலன்ஸ் செய்யும் உலக சாதனை செய்ய முடிவு செய்தார்.இதையொட்டி கடந்த 2019 முதல், 642 கிராம் எடை கொண்ட ஹாக்கி மட்டையை ஒரு விரலில் செங்குத்தாக நிறுத்தும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட, 6 மணி நேரம் 5 நிமிடம் கின்னஸ் உலக சாதனையை முறியடிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் தன் சாதனை முயற்சியை நேற்று காலை 8:29 க்கு துவக்கினார்.காஞ்சிபுரம் மாவட்ட அக்வாட்டிக் அசோசியேஷன் தலைவர் சாந்தாராமன், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், சாதனையாளர் அருண்குமார், தொடர்ந்து 6 மணி நேரம் 35 நிமிடம் ஹாக்கி மட்டையை ஒரே விரலில் நேர்நிறுத்தி பேலன்ஸ் செய்தார்.விளையாட்டு வீரர்கள், விளையாட்டு துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள் பலரும் இவரை பாராட்டினர்.இதைத் தொடர்ந்து, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற இவர் விண்ணப்பித்துள்ளார்.