சாலை நடுவில் மின்கம்பம்
இடமாற்றம் செய்யப்படுமா?
காஞ்சிபுரம் மாநகராட்சி 47வது வார்டு, ஓரிக்கை, முரளி நகருக்கு செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையின் நடுவில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் கட்டுமானப் பணிக்காக செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்டவற்றை எடுத்து வரும் லாரிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.இச்சாலையில் செல்லும் கனரக வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டும்போது, மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சாலை நடுவில் உள்ள மின்கம்பத்தை சாலையோரம் இடமாற்றம் செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மேகநாதன்,கீழ்கதிர்பூர்.சாலையில் நீண்டுள்ள கம்பியால்
விபத்து ஏற்படும் அபாயம்
காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெருவில் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மேட்டு கம்மாள தெருவிற்கு செல்லும் சாலையின் குறுக்கே, மழைநீர் வடிகால்வாய் தளத்தில் சிமென்ட் பூச்சு கலவை பெயர்ந்துள்ளதால், அதில், உள்ள கம்பிகள் வெளியே நீண்டுள்ளது.இதனால், நடந்து செல்லும் பாதசாரிகள் கம்பியில் இடித்துக்கொண்டு, காயமடையும் சூழல் உள்ளது. அதேபோல, இருசக்கர வாகனங்களும் பஞ்சர் ஆகும் நிலை உள்ளது.எனவே, மழைநீர் கால்வாயின் தளத்தில் வெளியே தெரியும் கம்பிகள் மீது, கான்கிரீட் கலவை வாயிலாக சீரமைக்க வேண்டும்.- சி.மணிகண்டன்,காஞ்சிபுரம் உத்திரமேரூர் - ஆற்பாக்கம் இடையே
கட் - சர்வீஸ் பேருந்து வேண்டும்
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள ஆற்பாக்கம், வெங்கச்சேரி, ஆதவபாக்கம், கடம்பர்கோவில், கருவேப்பம்பூண்டி, திருப்புலிவனம், மருத்துவான்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ- - மாணவியர் உத்திரமேரூர், திருப்புலிவனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும், திருப்புலிவனத்தில் உள்ள அரசு கலை கல்லுாரியிலும் பயின்று வருகின்றனர்.இங்கு பயிலும் மாணவ- - மாணவியர் மாலை பள்ளி, கல்லுாரி முடிந்து வீடு திரும்பும்போது, தடம் எண்.34 அரசு பேருந்து போதுமான அளவு இயக்கப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியர் நெரிசலில் சிக்கியபடி படிகளில் தொங்கியபடி பயணம் செல்ல வேண்டியுள்ளது.எனவே, காலை மற்றும் மாலை நேரத்தில் தடம் எண்.34 அரசு பேருந்தை உத்திரமேரூரில் இருந்து ஆற்பாக்கம் வரை கட் சர்வீஸ் பேருந்தாக இயக்க அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டல நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தி.சே.அறிவழகன்,திருப்புலிவனம்.