| ADDED : ஜூன் 23, 2024 07:54 AM
சென்னை : ''சென்னை மாநகராட்சியில் வார்டுகள் மறு சீரமைக்கப்பட்டு, 300 ஆக அதிகரிக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அறிவித்து உள்ளார்.சட்டசபையில் நேற்று, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் நேரு வெளியிட்ட அறிவிப்புகள்:சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், 89 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அனைத்து வார்டுகளிலும் ஒரே அளவு வாக்காளர்கள் இருக்கும் வகையில் மறு சீரமைக்கப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை 300 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கருணாநிதி நுாற் றாண்டு விழா தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ளரிப்பன் கட்டட வளாகத்தில், 75 கோடி ரூபாயில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும்10 கோடி ரூபாயில் 14 புதிய பூங்காங்கள், ஆறு நவீன விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும். 10 நீர்நிலைகள் 12.50 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்சென்னையில் 5 கோடி ரூபாயில் பரீட்சார்த்த முறையில் அறிவியல் பூங்கா அமைக்கப்படும். மழை நீரை சேமிக்க, 18 கோடி ரூபாயில் 15 இடங்களில் மழைநீர் தொட்டிகள் அமைக்கப்படும்.சென்னை மாநகரில், தெருக்களில் திரியும் மாடுகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். மாடுகளை தெருவில் விடாமல் தடுக்க, மாநகராட்சி கமிஷனர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.தெருவில் திரியும் மாடுகள் முதலில் பிடிபட்டால் 5,000 ரூபாய், இரண்டாவது முறை பிடிபட்டால் 10,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படுகிறது. மூன்றாவது முறை பிடிபட்டால் மாடுகளை பறிமுதல் செய்து ஏலம் விடவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என, அமைச்சர் நேரு தெரிவித்தார்.சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளை உருவாக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.இவ்வாறுஅறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.