| ADDED : மே 30, 2024 12:01 AM
ஸ்ரீபெரும்புதுார்:படப்பை அடுத்த, செரப்பணஞ்சேரியில் இருந்து, காஞ்சிவாக்கம் சாலை பிரதானமாக பிரிந்து செல்கிறது. சுற்றுவட்டார பகுதியினர், படப்பை, ஒரகடம், தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் ஏராளமான வாகனங்களில் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர்.இந்த நிலையில், போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த முக்கிய சாலையில், பெரும்பகுதிகளில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால், இரவில் கும்மிருட்டாக மாறி, வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர்.மேலும், இந்த சாலையில், நாவலுார் அருகே, மூன்று இடங்களில் சாலை வளைந்து செல்கின்றன. தடுப்பு இல்லாத வளைவில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், அசுர வளைவில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.எனவே, நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள், ஆபத்தான நிலையில் உள்ள வளைவுகளில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.