| ADDED : மே 26, 2024 01:43 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில் இருந்து, அருங்குன்றத்தை இணைக்கும் 2 கி.மீ., சாலை உள்ளது. பழவேரி, சீத்தாவரம், அரும்புலியூர் உள்ளிட்ட கிராம வாசிகள், இச்சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத், சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.பழவேரி மற்றும் சுற்று வட்டாரத்தில், தனியார் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து இயக்கப்படும் லாரிகளால், பழவேரி சாலை கடந்த 4 ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.இதுகுறித்து, அவ்வப்போது நம் நாளிதழில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒருங்கிணைந்த கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலையை சீரமைக்க, 1.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான முதற்கட்ட பணியாக தரைப்பாலங்கள் சீரமைத்தல், கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. அதை தொடர்ந்து, பணி நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்தனர்.இதுகுறித்து, கடந்த சில நாட்களுக்கு முன் நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தற்போது சாலை சீரமைப்பு பணி மீண்டும் துவங்கி நடைபெறுகிறது.