சென்னை:சென்னை பெருநகரில், ஒரே சமயத்தில் ஆறு துணை நகரங்களுக்கான முழுமை திட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பெருநகருக்கான இரண்டாவது மாஸ்டர் பிளான், 2008 ல் அறிவிக்கப்பட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, புதிய துணை நகரங்களை ஏற்படுத்த, அதில் பரிந்துரைக்கப்பட்டது. இரண்டாவது மாஸ்டர் பிளான் வெளியாகி 10 ஆண்டுகளை கடந்தும், புதிய துணை நகரங்கள் உருவாக்கும் பணிகள் துவங்கப்படவில்லை. இந்நிலையில், 2021ல் மூன்றாவது முழுமை திட்டத்துக்கான ஆயத்த பணிகளை துவக்கும்போது, புதிய துணை நகர பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. குறிப்பாக, உலக வங்கி அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, புதிய துணை நகர திட்டங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. இதன் அடிப்படையில் செங்கல்பட்டு, மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருமழிசை, திருவள்ளூர், மீஞ்சூர் ஆகிய ஆறு இடங்களில் துணை நகரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டு, எந்தெந்த கிராமங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது. இதற்கான வரைபடங்களை சி.எம்.டி.ஏ., கடந்த ஆண்டு வெளியிட்டது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் சி.எம்.டி.ஏ., நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: சென்னைக்கு வெளியில் ஆறு இடங்களில் துணை நகரங்கள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக தனித்தனி முழுமை திட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இதற்கான வரைவுத் திட்டங்கள் வெளியிடப்பட உள்ளன. குடியிருப்புகள் மட்டுமல்லாது, தொழில், சுற்றுலா மேம்பாட்டுக்கான கூறுகள் அடங்கியதாக முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி இந்நகரங்கள் அமைவதால், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்படும். இதனால், சென்னையில் நெரிசல் குறைவதுடன் புறநகர் பகுதிகளில் சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.