| ADDED : மார் 28, 2024 09:08 PM
சென்னை:சென்னை, எழும்பூரில் உள்ள சிறைத்துறை இயக்குனர் அலுவலகத்தில், பாரத் ஹிந்து முன்னணி நிர்வாகி டில்லிபாபு, நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார்.அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: எழும்பூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., பரந்தாமனை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததால் கைதாகி, சென்னை புழல் மத்திய சிறை இரண்டில் அடைக்கப்பட்டேன்.சிறையில் ஹிந்து மதத்திற்கு எதிரான செயல்கள் நடக்கின்றன. சிவன் சிலை அகற்றப்பட்டு உள்ளது. இதை சிறையில் பணிபுரியும், எஸ்.ஐ., ஜான்சன் என்பவர் தெரிவித்தார். புழல் சிறையில் சிவன் சிலையை மீண்டும் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து சிறைத்துறை இயக்குனரும் கூடுதல் டி.ஜி.பி.,யுமான மகேஷ்வர் தயாள், சிவன் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன், பி.சி.பி., எனப்படும் சிறை கைதிகளுக்கான கேன்டீனில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபற்றியும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.