| ADDED : ஜூன் 10, 2024 05:22 AM
திருவள்ளூர் : திருவள்ளூர், ஜெயா நகரைச் சேர்ந்தவர் காயத்ரி, 33. இவர், நேற்று முன்தினம் தன் மகனுடன் நெமிலிச்சேரியில் தாய் வீட்டிற்கு செல்வதற்காக, திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி செல்லும் மாநகரபேருந்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது இவரது அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், திடீரென பேருந்தில் இருந்து திபு திபுவென இறங்கி, ஆட்டோவில் ஏறினார்.சந்தேகம் அடைந்த காயத்ரி, தன் பையை சோதனை செய்தபோது, அதில் இருந்த 7 சவரன் நகைகள் மாயமாகி இருந்தன. இதையடுத்து, காயத்ரி கூச்சலிடவே அருகிலிருந்தோர் அந்த பெண்ணை பிடித்து, பேருந்து நிலையத்தில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.திருவள்ளூர் நகர போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, 36, என தெரிய வந்தது. அவரிடமிருந்து 7 சவரன் நகை மீட்கப்பட்டது. மகேஸ்வரியை கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.