மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள், பாறைகுன்றுகளில் கட்டப்பட்டுள்ள கோவில், குடைவரைகள் ஆகியவற்றை காண, ஆண்டுதோறும் சுற்றுலா பயணியர் திரள்கின்றனர்.சென்னை, சுற்றுப்புற பகுதி பயணியர், வார இறுதி, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில் படையெடுக்கின்றனர்.பள்ளிகளுக்கு ஆண்டு விடுமுறையாக உள்ள மே மாதம் பயணியர் குவிவர். கடந்த சில ஆண்டுகளாக, மே மாத கோடையில் கடும் வெயில் தகிக்கிறது. இக்காலத்தில், கத்திரி வெயில் சுட்டெரிக்கும் சூழலில், பயணியர் வருகை குறைந்து, மாமல்லபுரம் களையிழக்கிறது.கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய சிற்ப வளாகங்களில், தொல்லியல் துறை புல்வெளி அமைத்து பராமரிக்கிறது.இப்பகுதிகள் திறந்தவெளியானதால், கடும் வெயிலில் இளைப்பாறும் சூழலின்றி பாதிக்கப்படுகின்றனர். சில மரங்களே உள்ளதால், வெயிலிலிருந்து தப்பிக்க நிழற்பகுதியும் இல்லை.இச்சிற்ப பகுதிகளில், நுழைவாயிலில் இருந்து, சற்று தொலைவு கடக்க வேண்டும். குன்று பகுதியில் உள்ள குடைவரை பகுதிகளிலும், அவ்வாறே செல்ல வேண்டும்.இச்சிரமமான சூழலில், பெண்கள், குழந்தைகள், முதியோர், கடும் வெயிலில் விரைவில் களைப்படைகின்றனர். அவர்கள் ஒதுங்கி இளைப்பாற, நிழற்பகுதி இன்றி பரிதவிக்கின்றனர்.பயணியர் பாதிப்பை தவிர்க்க, சிற்ப பகுதிகளில், பாரம்பரிய சூழலுக்கேற்ப, தென்னை, பனை ஆகிய கீற்றில், தற்காலிக நிழற்குடில் அமைக்கலாம் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, பயணியர் கூறியதாவது:கத்திரி துவங்கி வெயில் சுட்டெரிக்கிறது. மதிய நேரத்தில், சிற்பங்கள் சூடாக உள்ளன. வெயிலில் சுற்றிப் பார்த்ததும், ஒதுங்க நிழல் இல்லை.சிற்பங்களை அவசரகதியில் பார்த்து வெளியேறி, வேறிடம் வந்தே ஓய்வெடுக்க வேண்டும். புல்வெளியில், இயற்கையான முறையில் நிழற்குடை இருந்தால், வெயிலுக்கு பயன்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.