காஞ்சிபுரம் : மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் ஒதுக்கீடு செய்வதில், ஆளும் கட்சியினர் தலையீடு அதிகமாக உள்ளது. அவர்களின் மிரட்டலால், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர், பி.டி.ஓ.,க்கள் ஆகியோர் அச்சமடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.இதில், 15வது நிதிக்குழு மானியம், ஊராட்சி பொது நிதி ஆகிய நிதிகளின் வளர்ச்சி பணிக்கு டெண்டர் என அழைக்கப்படும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, குறைந்த மதிப்பீடு பதிவு செய்த ஒப்பந்ததாரருக்கு பணிகள் வழங்கப்படுகின்றன. ஆய்வு செய்வதில்லை
அதேபோல, ஒன்றிய பொது நிதி, ஒன்றிய 15வது நிதிக்குழு மானியம், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், நபார்டு, சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி, லோக்சபா மேம்பாட்டு நிதி, மாவட்ட கவுன்சிலர் நிதி ஆகிய பல்வேறு நிதிகளுக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, குறைந்த மதிப்பீடு பதிவு செய்த ஒப்பந்ததாரருக்கு பணிகள் வழங்கப்படுகின்றன.ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்தின் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்படும் பெரும்பாலான வளர்ச்சி பணிகளுக்கு, ஆளும் கட்சி ஒன்றிய செயலர்களே பணிகளை பிரித்துக் கொடுக்கின்றனர்.இதற்கு, 15 சதவீதம் வரையில் கமிஷன் பெற்றுக்கொண்டு, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒப்பந்ததாரருக்கு பணிகளை ஒதுக்கீடு செய்து கொடுக்கின்றனர்.ஊராட்சி தலைவர்களுக்கு வழங்க வேண்டிய மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள், தனிப்பட்ட ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படுகின்றன.பணி எடுக்கும் ஒப்பந்ததாரர்களும், அவரவர் சவுகரியத்திற்கு ஏற்ப உதவிப்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரின் தயவில், பில் தொகை பெற்று செல்கின்றனர்.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் தரம் குறித்து ஆய்வு செய்வதில்லை என, ஊராட்சி தலைவர்கள் இடையே குற்றச்சாட்டு எற்பட்டு உள்ளது.உதாரணமாக, 2022- - 23ம் நிதி ஆண்டில், 4,784 பணிகள் எடுக்கப்பட்டன. இதில், 2,317 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மீதம், 2,467 பணிகள் நிலுவையில் உள்ளன. ஆட்சேபனை
கடந்த, 2022 - -23ம் ஆண்டு நிலுவை பணிகள் மற்றும் புதிய பணிகள் என, மொத்தம், 8,990 பணிகள் நடப்பாண்டிற்கு எடுக்கப்பட்டுள்ளன. இதில், 4,163 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 4,827 பணிகள் நடந்து வருகின்றன.இதில், பெரும்பாலான பணிகள் தரமில்லை என, ஊராட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆண்டு இறுதியில், சமூக தணிக்கை ஆய்வின் போது, ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர், பி.டி.ஓ.,க்கள் ஆகியோர் ஆட்சேபனைக்கு ஆளாக வேண்டி உள்ளது. பணிகள் தாமதம்
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறியதாவது:மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், தடுப்பணை, ஊராட்சி அலுவலகம் ஆகிய பல வித பணிகளுக்கு, பி.டி.ஓ.,க்களின் மூலமாக ஒப்பந்ததாரர் பில் தொகை எடுத்து சென்று விடுகின்றனர். பணிகள் தரமானதாகவும், சரியான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதை பி.டி.ஓ.,க்கள் உறுதி செய்வதில்லை. சமூக தணிக்கை ஆய்வு செய்யும் போது, பணிகளில் குறைபாடு இருந்தால் ஆட்சேபனை தெரிவிக்கப்படுகிறது. அந்த குறைபாடுகளை சரி செய்வதற்கு பணம் செலுத்தி சரி செய்ய வேண்டி உள்ளது.பணி ஒப்பந்தம் எடுத்தவருக்கு பதிலாக, ஊராட்சி தலைவர் பணத்தை அரசிற்கு செலுத்த வேண்டி உள்ளது. சில நேரங்களில், ஊராட்சி செயலர், பி.டி.ஓ.,க்களுக்கு இடையே பிரச்னை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, 100 நாள் வளர்ச்சி பணிகளை ஊராட்சி நிர்வாகங்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வளர்ச்சி பணிகளுக்கு முறையான அறிவிப்பிற்கு பிறகே, ஒப்பந்ததாரருக்கு டெண்டர் விடுகிறோம். பணிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே, பில் தொகை வழங்குகிறோம். இதில், தவறு நடக்க வாய்ப்பு இல்லை,'' என்றார்.