சென்னை:பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பரங்கிமலை பகுதிகளில் அரசு நிலங்கள், தனியார் பெயரில் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, இரண்டு தனித்தனி விசாரணை கமிட்டிகளை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி பிறப்பித்துள்ள உத்தரவு:சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு உட்பட்ட பல ஏக்கர் நிலங்கள், தனியார் பெயருக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதில் பதிவுத்துறையின் பல்வேறு அலுவலர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வந்து உள்ளது.பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள், தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்டதா, முறைகேடாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட பதிவுத்துறை, பிற துறை அலுவலர்கள் விபரம் தேவைப்படுகிறது.இதற்காக, சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில், ஒரு விசாரணை கமிட்டி அமைக்கப்படுகிறது.இதில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் அனுஷியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரஸ்வதி, வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.அதேபோல், தென் சென்னையில் இரண்டாவது இணை சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பரங்கிமலை பகுதியில், அரசு நிலங்கள் தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.இது தொடர்பான முறைகேடான பத்திரப்பதிவுகள், அதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் குறித்து அறிய, விசாரணை கமிட்டி அமைக்கப்படுகிறது.வணிக வரித்துறை இணை கமிஷனர் உமா மகேஸ்வரி தலைமையில், இந்த விசாரணை கமிட்டி அமைக்கப்படுகிறது.இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின், நில எடுப்பு பிரிவுக்கான துணை ஆட்சியர்கள் முருகன், இளங்கோவன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த இரண்டு விசாரணை கமிட்டிகளும், 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி, அறிக்கையை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.