உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி அரசு மருத்துவமனையில் மஞ்சள் காமாலை மாத்திரை...தட்டுப்பாடு!:ரூ.12,000 செலவிட்டு மருந்து கடைகளில் வாங்கும் அவலம்

காஞ்சி அரசு மருத்துவமனையில் மஞ்சள் காமாலை மாத்திரை...தட்டுப்பாடு!:ரூ.12,000 செலவிட்டு மருந்து கடைகளில் வாங்கும் அவலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மஞ்சள் காமாலை நோய்க்கு மாதந்தோறும் வழங்கப்படும் மாத்திரைகளும், தடுப்பூசியும் தட்டுப்பாடு நிலவுகிறது. தனியார் மருந்து கடைகளில் 12,000 ரூபாய் வரை செலவழித்து வாங்க வேண்டிய கட்டாயம் நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரயில்வே சாலையில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இங்கு, இதயம், மகப்பேறு, மனநலம், தீக்காயம், பொது மருத்துவம், குழந்தைகளுக்கான பிரிவு, டயாலிசிஸ், அறுவை சிகிச்சை என, பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், 765 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதி உள்ளது. புறநோயாளிகளாக 2,000 - 2,500 பேர் தினமும் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் மட்டுமல்லாமல், ராணிபேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களின் எல்லையில், காஞ்சிபுரம் அருகே வசிக்கும் நோயாளிகளும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.குறிப்பாக, சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு, கொலஸ்ட்ரால், இதய நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு பலரும் தொடர் சிகிச்சை பெறுகின்றனர். ஒவ்வொரு மாதமும், நுாற்றுக்கணக்கானோர் இந்த மாத்திரை பெறுகின்றனர்.இந்நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மாத்திரை மொத்தமாக வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படும் இந்த மாத்திரைகளை நம்பி, நோயாளிகள் உள்ளனர். இம்மருந்துகள் வெளியில் விலை அதிகம் என்பதால், மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில், இந்த மாத்திரைகளை, நோயாளிகள் வந்து பெற்று செல்கின்றனர்.

நோயாளிகள் புகார்

இந்நிலையில், மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கான 'சோபோஸ்புவிர்', 'டக்லடாஸ்விர் டை ஹைட்ரோகுளோரைடு' ஆகிய இரு மாத்திரைகள், கடந்த ஏப்., மாதம் வழங்கப்படவில்லை.அதேபோல, 'ஹெப்படைடிஸ் -பி, என்ற மஞ்சள் காமாலை தடுப்பூசி, மூன்று மாதங்களாக தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.விலை அதிகமுள்ள மஞ்சள் காமாலை மருந்துகளை, அரசு மருத்துவமனை, தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர். மருந்துக்காக கடந்த ஏப்ரல் மாதம், மருத்துவமனைக்கு இரண்டு, மூன்று முறை சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாக நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் சிலர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறோம். எங்களுக்கு மஞ்சள் காமாலை தொற்று உள்ளதால், மருத்துவமனையில் வழங்கப்படும் 'சோபோஸ்புவிர்', 'டக்லடாஸ்விர் டை ஹைட்ரோகுளோரைடு' ஆகிய இரு மாத்திரைகள் மாதந்தோறும் பெற்று வந்தோம்.இந்நிலையில், திடீரென ஏப்ரல் மாதம், மருந்து இல்லை என மருத்துவமனையில் கூறிவிட்டனர்.இம்மாத்திரையை தனியார் மருந்து கடைகளில் வாங்கினால், 12,000 ரூபாய் செலவிட வேண்டும். வாரத்திற்கு இரு முறை டயாலிசிஸ் செய்யும் எங்களால், வேலைக்கு செல்ல இயலாமல் வீட்டில் இருக்கிறோம்.அவ்வளவு பணம் செலவழித்து மாத்திரை வாங்க முடியாத சூழல் உள்ளது. எனவே, மஞ்சள் காமாலை நோய்க்கான மாதாந்திர மாத்திரையும், தடுப்பூசியும் தடையின்றி கிடைக்க, சுகாதாரத்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடவடிக்கை

இதுகுறித்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மட்டுமின்றி, தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், மஞ்சள் காமாலை நோய்க்கான மாத்திரை தட்டுப்பாடு நிலவி வருகிறது.ஒரு வாரத்தில் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கோடை வெயில் காரணமாக நீர்சத்து குறைபாடு, தோல் நோய் உள்ளிட்டவைக்கு சிகிச்சை பெற, மாலை நேரத்தில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி