உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கத்தில் இருந்து, பொற்பந்தல் வழியாக, திருமுக்கூடல் செல்லும் சாலை உள்ளது.சாலவாக்கம், எடமச்சி, பொற்பந்தல், பட்டா, காவணிப்பாக்கம், பேரணக்காவூர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி, காஞ்சிபுரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.காஞ்சிபுரத்தில் இருந்து, இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இச்சாலை வழியாக இயங்குகின்றன. இந்த சாலையில், காவணிப்பாக்கம், பட்டா, பொற்பந்தல் ஆகிய கிராம எல்லைகளுக்கு உட்பட்ட 2 கி.மீ., துாரம் கொண்ட சாலை, 15 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, குண்டும் குழியுமாக இருந்தது.இதனால், அடிக்கடி விபத்துகளும், சாலை பழுது காரணமாக, பேருந்துகளும் சரி வர இயங்காத நிலை இருந்து வந்தது. இந்த சாலையை சீரமைத்து தர சுற்றுவட்டார பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.ஆனால், இச்சாலை, வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்க அனுமதி தராததால், சாலையை சீரமைப்பதில் சிக்கல் இருந்து வந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையால், வனத்துறையினர் கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தனர்.இதையடுத்து, 2023- - 24ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3.20 கோடி ரூபாய் செலவில் இச்சாலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3 மாதங்களுக்கு முன் பணி துவங்கியது.தற்போது பணி முழுமையடைந்து, காவணிப்பாக்கம் காட்டு வழிசாலை புதுப்பொலிவு பெற்றுள்ளது. 15 ஆண்டுகளாக பழுதடைந்து இருந்த சாலை சீரமைத்து பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், இப்பகுதி வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.