உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏர்போர்ட்டிற்கு எடையார்பாக்கத்தில் நிலம் கையகம் முழுவீச்சு !  கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் முறையீடு

ஏர்போர்ட்டிற்கு எடையார்பாக்கத்தில் நிலம் கையகம் முழுவீச்சு !  கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் முறையீடு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க, எடையார்பாக்கத்தில் 147 ஏக்கர் நிலம் எடுக்கும் பணிக்கு, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூடுதல் இழப்பீடு கேட்டு, அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டு வருகின்றனர்.சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில் அமைக்கப்பட உள்ளது.இந்த விமான நிலையத்திற்கு தேவைப்படும் மொத்தம், 5,400 ஏக்கர் நிலத்தில், 3,750 ஏக்கர் தனியார் வசம் உள்ளன.பரந்துார் விமான நிலைய திட்ட நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது. நிலம் எடுக்கும் பணிக்கான முதல் அறிவிப்பு, இந்தாண்டு பிப்ரவரியில் வெளியானது.அதன்படி, காஞ்சிபுரம் தாலுகா மேல் பொடவூர் கிராமத்தில், 98 ஏக்கர் நிலம் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதை தொடர்ந்து, அதே தாலுகாவில் சிறுவள்ளூர் கிராமத்தில், 43 ஏக்கர். ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அக்கமாபுரத்தில், 158 ஏக்கர் நிலம் எடுக்க மார்ச்சில் அறிவிப்பு வெளியானது.விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ள இடத்தில், 1 ஏக்கரின் சந்தை மதிப்பு, சராசரியாக 15 லட்சம் ரூபாய் என்றளவில் உள்ளது. அதை விட கூடுதல் இழப்பீடு வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இருப்பினும், அரசு கையகப்படுத்தும் நிலத்திற்கு, இன்னமும் விலை நிர்ணயம் செய்யவில்லை என, விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இருப்பினும், ஒரு ஏக்கருக்கு சந்தை மதிப்பு காட்டிலும், கூடுதலாக பணம் வழங்க வேண்டும் என, மேல்பொடவூர், சிறுவள்ளூர் ஆகிய கிராம விவசாயிகள் நிலம் கையகப்படுத்தும் அரசு அலுவலகங்களுக்கு மனு அளித்து உள்ளனர்.அரசு தரப்பில் இருந்து எவ்வித பதிலும் அளிக்காததால், விவசாயிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பரந்துார் விமான நிலைய திட்டம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, நிலம் எடுப்பு பணி முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இதுவரை, 362 ஏக்கருக்கான நிலத்தின் உரிமையாளர்களிடம் விசாரணை முடிவடைந்து உள்ளது. அவர்கள், கூடுதல் இழப்பீடு வழங்குமாறு தெரிவித்தனர். இந்த தகவல் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. இனி, தொடர்ந்து நிலம் எடுக்கும் பணிக்கான அறிவிப்புகள் வரும். அதற்கு ஏற்ப, நிலம் எடுக்கும் பணி தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கொடுமை!எங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், நெல் சாகுபடி செய்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தோம். பரந்துார் விமான நிலையத்திற்கு நிலம் பறிபோவது வருத்தம் தான். இனி, 55 வயதிற்கு மேல் எங்கு சென்று நிலத்தை வாங்கி, விவசாயத்தை செய்ய முடியும். அரசு எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும், பூர்வீகத்தை விட்டு, புதிய இடம் பெயர்வது கொடுமையானது.- எல்.மனோகரன்,விவசாயி, எடையார்பாக்கம்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்