உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கனரக வாகனங்களுக்கு எச்சரிக்கை குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

 கனரக வாகனங்களுக்கு எச்சரிக்கை குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

வாலாஜாபாத்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்களிலிருந்து இயங்கும் கனரக வாகனங்கள், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கனிம வளத் துறை சார்பில் நோட்டீஸ் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் வட்டாரத்தில் இயங்கும் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுக்கு, இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கல் குவாரிகளில் இருந்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் விதிமுறைகளை மீறி செல்வதாக, 'தினமலர்' நாளிதழில் டிச., 2ல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அச்செய்தியில், பழையசீவரம் மூன்று வழிச்சாலை பிரிவு இடத்தில் விதிமுறைகளை மீறி தாறுமாறாக கனரக வாகனங்கள் இயங்குவதாக கூறப்பட்டுள்ளது. இதனால், பாலாற்றங்கரையின் மறுபுறத்தில் இருந்து பழையசீவரம் சந்திப்பு சாலைக்கு வரும் வாகனங்கள், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வேகமாக வரும் வாகனத்தோடு விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திருமுக்கூடல் பாலாற்று பாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 'பீக்ஹவர்' நேரங்களில் காலை 7:00 - 9:00; மாலை 4:00 - 6:00 மணி வரை கனரக வாகனங்கள் இயக்க விதித்த தடையை மீறி வாகனங்கள் செல்வதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே, வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் வட்டாரத்தில் இயங்கும் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து, கனிமங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் உரிய பாதுகாப்பு நடை முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தார்ப்பாய் கொண்டு மூடி அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் கனிமங்கள் கொண்டு செல்ல வேண்டும். சாலைகளில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும், பழையசீவரம் மூன்று வழி பிரியும் சாலையில் வேகமாக செல்லாமலும், பாதுகாப்பு நடவடிக்கை களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. திருமுக்கூடல் பாலாற்று பாலம் மீது 'பீக்ஹவர்' நேரங்களில், கனிமங்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் இயங்காமல் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் விதிகளை மீறி கனிமங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி