உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  100 நாள் வேலை திட்ட பணிகளில் ஆய்வு... துவக்கம்!;  ஊரக துறையினர், ஒப்பந்ததாரர்கள் கலக்கம்

 100 நாள் வேலை திட்ட பணிகளில் ஆய்வு... துவக்கம்!;  ஊரக துறையினர், ஒப்பந்ததாரர்கள் கலக்கம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒதுக்கீடு செய்த வளர்ச்சி பணிகளை, பொறியியல் துறை வல்லுனர்கள் ஆய்வு செய்யும் பணியை துவக்கி உள்ளனர். இதனால், ஊரக வளர்ச்சி துறையினர், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணி ஒதுக்கீடு செய்தவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஏரி, குளம், குட்டை துார்வாரும் பணிகள் அல்லாமல், தடுப்பணை, சாலைகள், ஊராட்சி கட்டடம், அங்கன்வாடி மைய கட்டடம் உள்ளிட்ட பலவித கட்டட கட்டுமான பணிகளை அரசு செய்து வருகிறது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2022- - 23ம் நிதி ஆண்டில், 4,784 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 2,317 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மீதம், 2,467 பணிகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022- - 23ம் ஆண்டு நிலுவை பணிகள் மற்றும் புதிய பணிகள் என, மொத்தம் 8,990 பணிகள் நடப்பாண்டிற்கு எடுக்கப்பட்டுள்ளன.இதில், 4,163 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மீதம், 4,827 பணிகள் நடந்து வருகின்றன என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.இருப்பினும், உத்திரமேரூர் உள்ளிட்ட சில ஒன்றியங்களில், செய்யாத பணிகளுக்கு, செய்ததாக கணக்கு காட்டி பணம் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக, உத்திரமேரூர் ஒன்றியத்தில், சில ஊராட்சிகளில் நிறைவு செய்யாத சாலை பணிகளுக்கு, நிறைவு செய்து விட்டதாக பணம் எடுக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக, உத்திரமேரூர் ஊராட்சிகளை நிர்வகிக்கும் பெண் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இளநிலை பொறியாளர் ஆகிய இருவரை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, சில நாட்களுக்கு முன் தற்காலிக பணி இடைநீக்கம் செய்துள்ளார்.இதையடுத்து, உத்திரமேரூர் ஒன்றியம் மட்டுமல்லாமல், பிற ஒன்றியங்களிலும் இது போன்ற முறைகேடுகள் அரங்கேறியுள்ளதா என, பொறியியல் துறை வல்லுனர்கள் ஆய்வு செய்யும் பணியை துவக்கி உள்ளனர்.இதனால், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் வேலை ஒதுக்கீடு செய்து கொடுத்தவர்கள் இடையே, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை பொறுத்தவரை, கடந்தாண்டு ஒதுக்கீடு செய்து, நிறைவு செய்யாத வளர்ச்சி பணிகளை, அடுத்த நிதியாண்டில் சேர்த்து செய்து விடுவோம்.தற்போது, பணிகளின் தன்மைகளை அறிந்துக் கொண்டு, தேவைப்படும் எனில், அதே பணிக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அவசியம் இல்லை எனில், ஒதுக்கீடு செய்த பணிக்கு பதிலாக, வேறு பணிகளை ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்ய உள்ளோம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி