உத்திரமேரூர்: மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவை துவங்கியதை அடுத்து, உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில், கரும்பு அறுவடை பணிகள் துவங்கப்பட்டுள்ளன. உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில், கரும்பு சாகுபடி பிரதானமாக உள்ளது. குறிப்பாக சீட்டணஞ்சேரி, கரும்பாக்கம், சாத்தணஞ்சேரி, பினாயூர், களியப்பேட்டை உள்ளிட்ட பகுதி களில், மற்ற பயிர்களை காட்டிலும், அதிக நிலப் பரப்பில் கரும்பு சாகுபடி நடக்கிறது. இப்பகுதிகளில் அறுவடையாகும் கரும்புகளை, மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அரவைக்கு அனுப்புகின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு இந்த ஆண்டில் கரும்புகள் அனுப்பும் வகையில், 3,500 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், 85,000 டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை, 22ம் தேதி துவங்கி உள்ளது. தொடர்ச்சியாக உத்திர மேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரும்பாக்கம், சீட்டணஞ்சேரி, சாத்ணஞ்சேரி உள்ளிட்ட பகுதி கரும்பு தோட்டங்களில் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது.