கரூர்:தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மூன்றாண்டுகள் ஆன நிலையில், அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்துக்கு இணைப்பு சாலை இல்லை. தி.மு.க.,வின் நிறைவேற்றப்படாத வாக்குறுதியால், கரூர் காங்., வேட்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வரும் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள், கார்கள் கரூர் நகர் அல்லது சுக்காலியூர் வழியாக, திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல வேண்டும். இதனால், கரூர் நகரப்பகுதிக்கு செல்லாமல் சணப்பிரட்டி, புலியூர் வழியாக திருச்சி சாலையை அடைய, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோயம்பள்ளி-மேலப்பாளையம் இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.அதன்படி, 13 கோடியே, 67 லட்ச ரூபாய் செலவில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் கடந்த , 2018ல், 18 பில்லர்களுடன் கூடிய கம்பீரமான உயர் மட்ட பாலம் பணி நிறைவு பெற்றது. ஆனால் கோயம்பள்ளி மற்றும் மேலப்பாளையம் பகுதியில், இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகள் கடந்த, ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கட்டி முடிக்கப்பட்ட உயர் மட்ட பாலத்தை பயன்படுத்த முடியாமல், பொது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: அமராவதி ஆற்றில் தண்ணீர் செல்லாத போது, கோயம்பள்ளியில் இருந்து மேலப்பாளையத்துக்கு ஆற்றில் இறங்கி செல்வோம். ஆனால், வாகனங்கள் செல்ல முடியாது. கடந்த நவம்பர் முதல், அமராவதி ஆற்றில் தண்ணீர் சென்றது. அப்போது பொதுமக்கள் ஆற்று தண்ணீரில் நடந்து சென்றோம். தண்ணீரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது பழுதாகிறது. இதனால், பல கிலோ மீட்டர் துாரம் சுற்றிதான், மேலப்பாளையம் மற்றும் சணப்பிரட்டி பகுதிக்கு செல்ல முடியும். எனவே, அணுகு சாலை அமைக்கும் பணியை நிறைவு செய்ய வேண்டும்.அணுகு சாலை அமைக்கப்பட்டால் சேலம், நாமக்கல், ஈரோடு பகுதியில் இருந்து வாகனங்கள், நொய்யல், வேலாயுதம்பாளையம், வெங்கமேடு, கோயம்பள்ளி சென்று, புதிய பாலத்தின் வழியாக திருச்சி சாலையை அடைய முடியும். மேலும் கரூர் வாங்கல், நாமக்கல் மோகனுார் இடையே காவிரியாற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. மோகனுார் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், வாங்கல், கோயம்பள்ளி வழியாக திருச்சி சாலையை அடையலாம். ஆனால், அணுகு சாலை இல்லாததால், பொதுமக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பாலம், பயனற்ற நிலையில் உள்ளது.இவ்வாறு கூறினர். * கோயம்பள்ளி-மேலப்பாளையம் இடையே அமராவதி ஆற்றில் கட்டப்பட்ட பாலம், கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதியில் உள்ளது. கடந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டு, வெற்றி பெற்ற சிவகாம சுந்தரி, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இணைப்பு சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், தி.மு.க., ஆட்சி வந்து மூன்றாண்டுகள் நெருங்கும் நிலையில், இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை. இதனால், கரூர் எம்.பி., தொகுதி காங்., வேட்பாளர் ஜோதிமணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.