| ADDED : ஜூலை 03, 2024 03:08 AM
கரூர்:கரூர், ராகவேந்திரர் கோவில், சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவிலுக்கு, மந்த்ராலய பீடாதிபதி நேற்று வருகை தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில் உள்ளது. ஆயிரக்கணக்கான மத்வா சமூகத்தினரின், குல தெய்வமாக கருதப்படுகிறார். கருவறைக்குள் கோபால கிருஷ்ணரின் சிலையும் உள்ளது. இக்கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது என நம்பப் படுகிறது.கருவறைக்கு இடதுபுறம் மத்வாச்சாரியார் சன்னதி உள்ளது. சிலை வியாசராஜரால் நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது.இந்த கோவிலுக்கு, மந்த்ராலய பீடாதிபதி சுபதீந்தர தீர்த்த சுவாமிகள் நேற்று விஜயம் செய்தார். யோகநரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளை செய்தார்.பின், பக்தர்களுக்கு அருளாசியுடன், மந்த்ராலய பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் அர்ச்சகர் பிரசன்னா, அறங்காவலர்கள் ஜெயநரசிம்மன், குப்புராவ், நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.பின், கரூர் ராகவேந்திரர் கோவிலுக்கும் வருகை தந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.