கரூர்: கரூர் அருகே, மாயனுார் கதவணையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் சரிந்து வருவதால், கோடையில் குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.கரூர் மாவட்டம், மாயனுாரில் காவிரியாற்றின் குறுக்கே, 1.05 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டுள்ளது. அதில் மேட்டூர் அணை, அமராவதி அணை, பவானிசாகர் அணை மற்றும் நொய்யல் ஆற்று தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, நான்கு கிளை வாய்க்கால்கள் மற்றும் காவிரியாற்றில் முக்கொம்பு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, 278 கன அடி தண்ணீர் வந்தது. தற்போது கதவணையில், 126.37 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, பொதுப்பணிதுறை அதிகாரிகள் கூறியதாவது: மாயனுார் அருகில் கட்டளை ஒட்டியுள்ள பகுதியில், கரூர், திண்டுக்கல் மாவட்ட கூட்டு குடிநீர் திட்டத்திற்காக, நீரேற்று நிலையம் உள்ளது. குறிப்பாக, கரூர் மாநகராட்சி உள்பட பல்வேறு டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மேட்டூர் அணையில், 62 அடி மட்டுமே தண்ணீர் இருக்கும் நிலையில், குடிநீர் தேவைக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இங்கு, 278 கன அடி தண்ணீர் நீர் வரத்து இருக்கிறது.சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, கதவணையில் தண்ணீர் இருப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இங்கிருந்து குடிநீர் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் வறண்டு காணப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் முற்றிலும் கதவணை வறண்டு போகும் அபாயம் இருப்பதால், தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பகுதியில், உடனடியாக போர்வெல் அமைத்தல் பணிகளில் ஈடுபட்டால் மட்டுமே, ஓரளவு தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.