கரூர்: கரூர் அருகே, நெரூர்-திருமுக்கூடலுார் சாலையின், இருபுறமும் செடிகள் முளைத்துள்ளது. இதனால், சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டம், நெரூர்-திருமுக்கூடலுார் செல்லும் சாலையில், புதுப்பாளையம், அரங்கநாதன் பேட்டை உள்ளிட்ட, பல்வேறு கிராம பகுதிகள் உள்ளன. அதில், ஏராளமான வீடுகள், அரசு பள்ளிகள், கோவில்கள் உள்ளன. மேலும் காவிரியாற்றுடன், அமராவதி ஆறு இணையும் இடமான, திருமுக்கூடலுாரில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. அதற்கு பிரதோஷம், கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனுார் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.ஒருபக்கம் காவிரியாறு, மறுபக்கம் விவசாய நிலங்கள் உள்ள, நெரூர்-திருமுக்கூடலுார் சாலை ஓரத்தில், மழை காரணமாக செடிகள் அதிகளவில் முளைத்து, சாலையை மறைத்துள்ளது. மேலும், நெரூர்-திருமுக்கூடலுார் சாலையில், இரவு நேரத்தில் மின் விளக்குகளும் சரிவர எரிவது இல்லை. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் சாலையில் செல்வதை கூட, கவனிக்க முடியவில்லை.எனவே, கரூர் அருகே நெரூர்-திருமுக்கூடலுார் சாலையில், மழை காரணமாக முளைத்துள்ள செடிகளை அகற்றி, மின் விளக்குகள் அனைத்தும் எரியும் வகையில், நெடுஞ்சாலை துறை மற்றும் கிராம பஞ்சாயத்துகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.v