உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவிரியாற்றில் கூடுதல் கதவணை தேவை விவசாயிகள் எதிர்பார்ப்பு

காவிரியாற்றில் கூடுதல் கதவணை தேவை விவசாயிகள் எதிர்பார்ப்பு

கரூர், காவிரியாற்றில் பல இடங்களில் கூடுதலாக கதணைகளை கட்ட வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாக காவிரியாறு உள்ளது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, காவிரியாற்றின் நீர்பிடிப்பு பகுதிகள், கர்நாடகா மாநிலத்துக்கு சென்று விட்டன. இதனால், காவிரியாறு தொடர்பாக, தமிழகம்-கர்நாடகா மாநிலங்கள் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது.தற்போது, மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதனால், தமிழக விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, பெருமளவுக்கு குறைந்து விடும் என்ற அச்சம், தமிழக விவசாயிகளிடையே உள்ளது. இதனால், தமிழகத்தில் காவிரியாற்றில் பல இடங்களில், புதிதாக கதவணைகளை கட்ட வேண்டும் என, தமிழக அரசுக்கு பல்வேறு விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.இதுகுறித்து, காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் கூறியதாவது:நீர்மின் உற்பத்தி திட்டங்கள் மூலம், மேட்டூர் அணைக்கு கீழ்செக்கனுார், நெரிஞ்சிபட்டி, கோனேரிப்பட்டி, வாராகி கோட்டை, அக்ரஹாரம், ஓடப்பள்ளி, சமயசங்கலி, சோழசிராமணி ஆகிய இடங்களில் கதவணைகள் கட்டப்பட்டு, ஐந்து டி.எம்.சி., தண்ணீர் தேக்கப்படுகிறது.மறுசுழற்சிக்கு பின், தண்ணீர் காவிரியில் விடப்படுகிறது. அந்த பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீருக்கு பிரச்னை இல்லை. அதேபோல், காவிரியாற்றில் கண்டிபாளையம் -ஊஞ்சலுார், கொண்டளம் - மரவாப்பாளையம், குமாரமங்கலம் - நன்னியூர், ஸ்ரீராமசமுத்திரம் -மாயனுார், மகேந்திரமங்கலம் - லாலாப்பேட்டை, அய்யம்பாளையம் - பெட்டவாய்தலை, குணசீலம் - திருப்பாய்துறை, மேலுார் - ஸ்ரீரங்கம், கிளிக்கூடு - வேங்கூர் ஆகிய, ஒன்பது இடங்களில் கதவணைகள் கட்ட கடந்த, 2004 முதல் கோரிக்கை வைத்து வருகிறோம்.அதில், மாயனுாரில், 1.5 டி.எம்.சி., தண்ணீர் தேக்க கதவணையும், ஸ்ரீரங்கம் அருகே முத்தரச நல்லுாரில் தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், 405 கோடி ரூபாயில் புகழூரில், தடுப்பணை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.அதேபோல், வெள்ளக்காலங்களில் வரும் நீர் காவிரியாற்றில் செல்வதை தடுக்க, லாலாப்பேட்டை - மகேந்திரமங்கலம் இடையே கதவணை கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கதவணைகளின் தேவையை, தமிழக அரசு உணர்ந்து விரைந்து பல இடங்களில் கட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை