உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜோதிமணி வெற்றி பெற்றால் டெல்லிக்கோ கர்நாடகாவுக்கோ செல்லணும்: மாஜி அமைச்சர் பேச்சு

ஜோதிமணி வெற்றி பெற்றால் டெல்லிக்கோ கர்நாடகாவுக்கோ செல்லணும்: மாஜி அமைச்சர் பேச்சு

கரூர் : ''காங்., கட்சி வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றால், அவரை பார்க்க டெல்லிக்கோ, கர்நாடகா மாநிலத்துக்கோ கரூர் தொகுதி மக்கள் செல்ல வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.கரூர் லோக்சபா தொகுதி, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கத்தாளப்பட்டியில், அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:தமிழகத்தில், கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து விட்டது. காவிரியாற்றில் தண்ணீர் எதிர்பார்த்த அளவில் இல்லாததால், கரூர் மாவட்டத்தில் பள்ளப்பட்டி நகராட்சி, புகழூர் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு என செய்திகள் வருகிறது. அதற்கு காரணம், விடியா தி.மு.க., அரசு தான். கர்நாடகா மாநிலத்தில் இருந்து, காவிரியாற்றில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற, தி.மு.க., அரசு தவறி விட்டது. கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார், தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட, தர மாட்டேன் என சொல்லி விட்டார்.ஆனால் அவரை கண்டிக்காத கரூர் காங்., வேட்பாளர் ஜோதிமணி, கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாருக்கு வாழ்த்து சொல்லி, போட்டோ எடுத்து கொள்கிறார். ஜோதிமணிக்கு காவிரியாற்றின் பெருமை தெரியாது. கரூர் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் ஜோதிமணி துரோகம் செய்கிறார்.அவரை மீண்டும் வெற்றி பெற வைத்து விடக்கூடாது. ஜோதிமணி மீண்டும் வெற்றி பெற்றால், ராகுல் நடத்தும் யாத்திரைக்கு சென்று விடுவார். அல்லது துணை முதல்வர் சிவக்குமாருக்கு வாழ்த்து சொல்ல, கர்நாடகா மாநிலத்துக்கு சென்று விடுவார். இதனால், கரூர் தொகுதி மக்கள், ஜோதிமணியை சந்திக்க டெல்லிக்கோ அல்லது கர்நாடகா மாநிலத்துக்கோ செல்ல வேண்டும்.கடந்த மூன்றாண்டு கால, தி.மு.க., ஆட்சியில் தாலிக்கு தங்கம், கர்ப்பிணி பெண்களுக்கு பரிசு பெட்டகம், உதவி தொகை இல்லாமல் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமை தொகை, 1,000 ரூபாய் வழங்குவதாக, முதல்வர் ஸ்டாலின் சொன்னார். ஆனால், 27 மாதங்களுக்கு பிறகு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கொடுத்த அழுத்தம் காரணமாக, உரிமை தொகை பாதி பெண்களுக்குதான் வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி வெறும், பொய்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்னும், 24 மாதங்களில் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., ஆட்சி அமையும். அதற்கு, அச்சாரமாக லோக்சபா தேர்தலில், கரூர் தொகுதியில் வேட்பாளர் தங்கவேலை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு பேசினார்.அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், மாவட்ட துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை