ஓசூர்: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, காங்., வேட்பாளர் கோபிநாத்திற்கு ஆதரவாக, ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிகளில், விவசாயிகள், தொழிலாளர்களை சந்தித்து, மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். உழவர் சந்தை மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில், துண்டு பிரசுரங்களை வழங்கி, கை சின்னத்திற்கு, மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் கட்சியினர் ஆதரவு திரட்டினர். தமிழக முதல்வர் ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் அறிவித்த, 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கு அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம், மக்களின் மனுக்களின் மீது தீர்வு காண, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி, மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாத்தில் ஈடுபட்டனர்.முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான, 'இண்டியா' கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால், மக்களுக்கான தேவையான திட்டங்கள் தொடர்ந்து கிடைக்கும் எனக்கூறி, தி.மு.க.,வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஓசூர் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ராமு, திம்மராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.