| ADDED : மே 19, 2024 02:54 AM
கிருஷ்ணகிரி: ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரிடம், தாங்கள் கூறும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக்கூறி, 17.98 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 42, தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த பிப்.,27ல் வாட்ஸ்ஆப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் தாங்கள் அனுப்பும் ஷேர்களை வாங்கினாலோ அல்லது அதில் முதலீடு செய்தாலோ உங்கள் முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும், இரு மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் எனக்கூறி, ஒரு இணையதள லிங்க்கையும் அனுப்பியிருந்தனர்.அதை நம்பிய சீனிவாசன், அவர்கள் அனுப்பிய லிங்க்கை கிளிக் செய்து இணையதளத்தில் உள்ள ஷேர்கள் சிலவற்றை வாங்கியும், சிலவற்றில் முதலீடு செய்யவும் முடிவு செய்து, அவர்கள் அனுப்பிய வங்கி கணக்குகளில், 17.98 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். நாளடைவில் அந்த இணையதளத்தில் இவரது முதலீடுகள் அதிகமாகவதுபோல் காட்டினாலும், எந்த பணத்தையும் இவரால் எடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த இணையதள பக்கங்கள் முடங்கியது. இவருக்கு மெசேஜ் அனுப்பிய வாட்ஸ் அப் எண்களும் சுவிட்ச் ஆப் ஆனது. அப்போது தான், தனக்கு போலியான இணையதள முகவரியை அனுப்பி தன்னை ஏமாற்றியுள்ளனர் என்பதை உணர்ந்த சீனிவாசன், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் அளித்த புகார்படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.