சேலம்: சேலம் லோக்சபா தொகுதியில், 'இண்டியா' கூட்டணி சார்பில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி, சேலம் தெற்கு சட்டசபை தொகுதி, அம்மாபேட்டையில் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:சமீபத்தில் ஒரே மாதத்தில் ராட்சச மழை. ஒரே நாளில், 8 மாவட்டங்கள் வெள்ள காடாக மாறியதை ஊடகங்கள், பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். விவசாயிகளின் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன. 35 லட்சம் வீடுகள் மூழ்கின. நாட்டில் மிக பெரிய அந்த பேரிடருக்கு ஆறுதல் சொல்ல கூட, பிரதமர் நரேந்திர மோடி வரவில்லை.மழை வெள்ளத்திலே, 35,000 கோடி ரூபாய் நஷ்டம் என நாம் கேட்டோம். பிரதமர் மோடி சல்லி காசு கூட கொடுக்கவில்லை. நிவாரணத்துக்கு பலமுறை கேட்டும் ஒருமுறை கூட ஒரு காசு கூட கொடுக்கவில்லை. இப்படிப்பட்டவர் பிரதமராக தொடரலாமா? நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இன்று விவசாயிகள், டில்லியில் போராடுகிறார்கள். மோடி எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் மோடியோ, 14 லட்சம் கோடி கடனை, 50 முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளார். இ.பி.எஸ்., ஆட்சியில், கைகட்டி வாய் பொத்தி கொத்தடிமைகளாக அவர்களுக்கு சேவை செய்தார்.இப்போது கள்ள கூட்டணி வைத்திருக்கிறார். மோடி இங்கே பலமுறை வந்திருக்கிறார். பேசி இருக்கிறார். தி.மு.க.,வை உரு தெரியாமல் ஆக்குவேன் என்று கூட சொல்லியிருக்கிறார். ஆனால் ஒரு வார்த்தை கூட அ.தி.மு.க., அவர்களின் ஊழலை பற்றி பேசவில்லை. அதேபோல் இ.பி.எஸ்., பா.ஜ., பற்றி பேச மாட்டார். அதுதான் அவர்களுக்குடைய கள்ளத்தொடர்பு.அதனால், அ.தி.மு.க.,வுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், மோடிக்கு போடுகிற ஓட்டு என்பதை நினைத்து நீங்கள் ஓட்டுப்போட வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு போடுகிற ஒவ்வொரு ஓட்டும், தமிழகத்துக்கு வைக்கிற வேட்டு என்பதை மனதிலே நிறுத்தி ஓட்டுப்போடுங்கள்.அதேபோல் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், எப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்து இருக்கிறார் என்பதற்காக, இதை சொல்லுகிறேன். 6 மாதங்களுக்கு முன், பத்திரிகையாளர் கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்வி, 'பிரதமர் மோடிக்கு எவ்வளவு மதிப்பெண் போடுவீர்கள்' என்பது. அதற்கு ராமதாஸ், 'மோடிக்கா? இந்த நாட்டில் பூஜ்யத்துக்கு கீழ் மதிப்பெண் இருந்தால் போடலாம்' என்றார். ஆனால் இன்று மாங்காவை துாக்கி கொண்டு அவரோடு வந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளை நாம் இனம் கொண்டு புறக்கணிக்க வேண்டும்.அதேநேரம் முதல்வர் ஸ்டாலின், எங்கள் சகோதரிகளை பார்த்து பார்த்து திட்டங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார். மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு, 1,000 ரூபாய் உதவித்தொகை கொடுக்கிறார். அது மட்டுமல்ல பஸ்சில் போகும் பெண்களுக்கு கட்டணம் இல்லை. மேலும் மகளிர் கடனை எல்லாம் தள்ளுபடி செய்தார். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்ட நகை கடனையெல்லாம் தள்ளுபடி செய்தார். ஆக பெண்கள் முன்னேற்றத்துக்கு அவ்வளவு அக்கறை செலுத்துகிற ஆட்சி, முதல்வர் ஸ்டாலினின், தி.மு.க., ஆட்சி. ஆரம்ப பள்ளியில் படிக்கிற பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுக்கிறார். அவருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். அ.தி.மு.க., பா.ம.க.,வை புறக்கணித்து, மோடியை புறக்கணித்து, பார்லிமென்டுக்கு, உங்கள் பிரதிநிதியாக அனுப்பும்போது, வானத்தை வில்லாக வளைப்பேன் என்று நான் சொல்ல மாட்டேன். மணலை கயிறாக திரிப்பேன் என்று பொய் சொல்ல மாட்டேன். ஆனால் எனக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு நன்றியோடு இருப்பேன். அதனால் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப்போடுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.இதில், காங்., மாநகர மாவட்ட தலைவர் பாஸ்கர், இ.கம்யூ., மோகன், அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன், பொதுக்குழு உறுப்பினர் அசோகன், நெசவாளர் அணி ஓ டெக்ஸ் இளங்கோவன், மாநகராட்சி கவுன்சிலர் திருஞானம், இண்டியா கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள், தி.மு.க., நிர்வாகிகள், மக்கள் பங்கேற்றனர்.