ஓசூர்:ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 871 கன அடியாக அதிகரித்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 845 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால், நேற்று காலை நீர்வரத்து, 871 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 100 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 40 அடியை தாண்டி, வேகமாக முழு கொள்ளளவை எட்டும் வகையில் உயர்வதால், வரும் நாட்களில் தென்பெண்ணை ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.அணை மதகுகளின் ஷட்டர்கள் மாற்றும் பணி நடந்ததால், கடந்தாண்டு ஜூன் முதல், கடந்த ஏப்., 2வது வாரம் வரை, அணை நீர்மட்டத்தை, 24 அடிக்கு மேல் நீர்வளத்துறை உயர்த்தவில்லை. கடந்த மாதம் ஷட்டர், மதகு சுவர்களுக்கு இடையே நீர் கசிவால், அதை சீரமைக்க, 24 அடியாக நீர்மட்டம் குறைக்கப்பட்டது. இப்பணி முடிந்த பின், அணைக்கு வரத்தாகும் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது.இரு நாட்களாக கெலவரப்பள்ளி அணைக்கு, 800 கன அடிக்கு மேல் நீர்வரத்து உள்ளதால், அடுத்த மாதம், முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் அளவிற்கு போதுமான நீர் அணையில் சேமிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.