ஓசூர்: ஓசூர், சூளகிரியில் புதிதாக நீதிமன்றம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நேற்று ஆய்வு செய்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தனி தாலுகா உருவாக்கப்பட்டு கடந்த, 2015 முதல் செயல்படுகிறது. சூளகிரியை சுற்றியுள்ள, 42 பஞ்.,க்களில் உள்ள, 417 கிராம மக்கள், வழக்கு விசாரணைக்கு ஓசூர் அல்லது கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டியுள்ளது. அதனால், சூளகிரியில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய நீதிமன்றம் கட்ட, சூளகிரி வேளாங்கண்ணி பள்ளி அருகே, 5 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை தேர்வு செய்துள்ளது. நீதிமன்றத்திற்கு சொந்த கட்டடம் கட்டும் வரை, சூளகிரியிலுள்ள பழைய பி.டி.ஓ., அலுவலகத்தை நீதிமன்றமாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத், பழைய பி.டி.ஓ., அலுவலகம் மற்றும் நீதிமன்றம் கட்ட தேர்வு செய்துள்ள நிலத்தை, நேற்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து, ஓசூர் சென்ற அவர், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும் இடத்திற்கு அருகே, திருவள்ளூவர் நகரில், ஓசூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட தேர்வு செய்துள்ள, 7 ஏக்கர் நிலம் மற்றும் தற்போது ஓசூர் தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சுமதி சாய்பிரியா, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், தாசில்தார்கள் சக்திவேல், விஜயகுமார், ஓசூர் வக்கீல் சங்க தலைவர் ஆனந்தகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.