| ADDED : ஜூன் 29, 2024 02:54 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில், மாவட்ட காசநோய் மையம் மற்றும் 'ரீச்' தொண்டு நிறுவனம் சார்பில், காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. 'ரீச்' தொண்டு நிறுவன மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரன் வரவேற்றார். மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் துணை இயக்குனர் சுகந்தா பேசியதாவது:உலகளவில் இந்தியாவில் காசநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இறப்பு விகிதம், 7 சதவீதமாக உள்ளது. இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அரசு கூறினாலும், அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால், 2030க்குள் இந்நோயை முற்றிலும் ஒழிக்க முடியும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைகளில் 'சிபிநாட்' எனும் சிறப்பு பரிசோதனை இயந்திரங்களுடன் கூடிய ஆய்வகம் உள்ளது. காசநோய் பாதிப்படைந்தவர்களுக்கு சத்தான உணவு வாங்கி சாப்பிட, மத்திய அரசு நிக்சய் போஷன் யோஜனா திட்டத்தில் உதவித்தொகை வழங்குகிறது. நோயாளிகளை அழைத்து வந்து குணமாக்க உதவுபவர்களுக்கும் உதவித்தொகை வழங்குகிறது.காசநோயை தடுக்க மாவட்டத்தில், பஞ்.,தோறும் மொபைல் எக்ஸ்ரே வாகனம் மூலம் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கடந்தாண்டில் மட்டும் மொபைல் எக்ஸ்ரே மூலம், மாவட்டத்தில், 7,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, கடந்தாண்டை விட காசநோய் பாதிப்பு, 20 சதவீதம் குறைந்துள்ளது.இவ்வாறு பேசினார்.காசநோய் வெற்றியாளர்கள் சிவரஞ்சனி, பூங்கொடி மற்றும் மாவட்ட காசநோய் தடுப்பு கண்காணிப்பு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.