| ADDED : ஜூன் 14, 2024 12:57 AM
கிருஷ்ணகிரி, தென்னையில் கருத்தலைப்புழு மேலாண்மை குறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 14,644 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. சிவப்பு கூன் வண்டிற்கு அடுத்தப்படியாக தென்னைக்கு பெருத்த சேதம் விளைவிப்பது அத்துப்பூச்சியாகும். முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள், இலையின் அடிப்புற பச்சையத்தை சுரண்டி சாப்பிட்டு, விரைந்து வளர்ச்சியடையும். புழுக்கள் சாம்பல் நிறத்தோடு கூடிய கருப்பு நிறத்தலையுடன் காணப்படும். 45 நாட்களுக்கு பின் கூட்டுப்புழுவாக மாறி, 10 முதல், 12 நாட்களில் இறக்கையுள்ள அந்துப்பூச்சிகளாக மாறி, தென்னையை அழித்து விடும்.இதனை தவிர்க்க, அதிகம் சேதமாகி காய்ந்து போன இலைகளை வெட்டி அகற்றி, தீயிட்டு எரிக்க வேண்டும். தாக்கப்பட்ட இடத்தில் ஒட்டுண்ணிகளை தகுந்த இடைவெளியில் விட வேண்டும். கருந்தலைப்புழு பருவத்தை கட்டுப்படுத்த, பிரக்கானிட் மற்றும் பெத்திலிட் ஒட்டுண்ணிகளை மரம் ஒன்றுக்கு முறையே, 10 எண்ணிக்கையில் விட வேண்டும். சால்சிட் அல்லது யுலோபிட் ஒட்டுண்ணிகளை, ஒரு மரத்திற்கு, ஒன்று மற்றும், 20 என்ற எண்ணிக்கையில் கூட்டுப்புழு நிலையில் விட வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு, 2 விளக்கு பொறிகளை, இரவில் வைத்து அத்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.