ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில், 16 நீர்நிலைகளை தனியார் பங்களிப்புடன், வனத்துறை துார்வாரி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் அரிய வகை உயிரினங்கள், மரங்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்கும் வகையில், 2014 ல் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம், 2022 ல் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தை, தமிழக அரசு அறிவித்தது. உணவு மற்றும் தண்ணீருக்காக வன விலங்குகள் வனத்தை விட்டு அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. இதனால், யானை - மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கின்றன. பயிர்கள் சேதமாகின்றன. வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறுவதை தடுக்க, அதற்கு தேவையான தீவனம் வனத்திற்குள் கிடைப்பதை, வனத்துறை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. விலங்குகளுக்கு தேவையான நீரை, வறட்சி காலத்திலும் வழங்க, நீர்நிலைகளை துார்வாரும் பணியை, தனியார் பங்களிப்புடன் வனத்துறை துவங்கியுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., பவுண்டேசன் சார்பில், சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, காவேரி வடக்கு, தெற்கு வன உயிரின சரணாலயங்களில், வனவிலங்குகள் அடிக்கடி நீர் அருந்தும், 16 நீர்நிலைகள் துார்வாரப்பட்டு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் நிறுவனங்கள் வனப்பகுதியில் பணிகளை மேற்கொள்ள விரும்பினால், 04344 - 296600, 90478 32156 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தெரிவித்துள்ளார்.