கிருஷ்ணகிரி: திருவண்ணாமலையில் இன்று, 3ம் தேதி கார்த்திகை மாத மஹாதீபம் ஏற்றப்படுகிறது. இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. மேலும் வட மாவட்டங்களிலிருந்து தமிழகம், புதுச்சேரிக்கு செல்ல கிருஷ்ணகிரி மாவட்டமே நுழைவாயிலாக உள்ளது.வடமாநிலங்கள் மற்றும் கர்நாடக, ஆந்திராவில் இருந்து பல்வேறு பொருட்களை ஏற்றி வரும் நுாற்றுக்கணக்கான கன்டெய்னர் மற்றும் கனரக வாகனங்கள் கிருஷ்ணகிரி வழியாக, கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் புதுச்சேரிக்கு செல்லும். சேலம், திருச்சி, சென்னையில் இருந்தும் பொருட்களை ஏற்றி வரும், கனரக வாகனங்கள் கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலை யில் செல்வது அதிகரித்துள்ளது. நடப்பாண்டில், திருவண்ணாமலை கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்வோர் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கனரக வாகனங்கள், கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி போலீசார் கிருஷ்ணகிரியில், டோல்கேட், சேலம் ஆவின் மேம்பாலம், திருவண்ணாமலை பிரிவு ரோடு, மற்றும் திருவண்ணாமலை மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து, கனரக வாகனங்களை இச்சாலையில் செல்ல தடை விதித்து, மாற்றுப்பாதையில் அனுப்பினர்.இது குறித்து போலீசார் கூறுகையில், 'கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள், லாரி, பிக்கப் வேன்கள் கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலையை தவிர்த்து, வேலுார், ஆற்காடு, வந்தவாசி, திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல விருத்தாச்சலம், சிதம்பரம், நாகப்பட்டணம் வழியாக வேளாங்கண்ணி செல்லும் வாகனங்கள், தர்மபுரி, சேலம் வழியாக வாழப்பாடி, ஆத்துார் வழியாக அனுப்பப்பட்டு வருகின்றன. கார்கள் மற்றும் வழக்கமாக செல்லும் பஸ்கள் மட்டும், கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலையில் அனுமதிக்கப்படுகின்றன' என்றனர்.* திருவண்ணாமலை நகருக்குள், வரும், 5ம் தேதி வரை கனரக வாகனங்கள் நுழைய அம்மாவட்ட காவல்துறை தடைவிதித்துள்ளது. நேற்று அரூர் கச்சேரிமேட்டில் முகாமிட்ட போலீசார், கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அரூர், ஊத்தங்கரை வழியாகவும், அதேபோல், அரூர், நரிப்பள்ளி, தானிப்பாடி வழியாக, திருவண்ணாமலைக்கு செல்லும் கனகர வாகனங்களை, ஊத்தங்கரை, திருப்பத்துார், வேலுார் வழியாக, மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர்.