மா.திறனாளிகளுக்கு தேசிய ஐ.டி., கார்டு வழங்கும் முகாம் நவ.,ல் துவக்கம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள், சேவைகள் அரசு மருத்துவமனையில் வரும் நவ., முதல் நடக்கிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒவ்வொரு மாதமும், முதல் மற்றும் 3வது வார புதன்கிழமைகளில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம்கள், சேவைகள், அரசு மருத்துவமனைகளில் நடக்கிறது.அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டையிலுள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில், வரும் நவ., மாதம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் நடக்கிறது.அதேபோல, 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நவ., மாதம் முதல் வாரந்தோறும் புதன்கிழமையன்று போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், முகாம்கள், சேவைகள் நடக்க உள்ளது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.