தார்ச்சாலையை சீரமைக்கபொதுமக்கள் கோரிக்கைஅரூர் - சேலம் பிரதான சாலையில் இருந்து, டி.புதுாருக்கு செல்லும் 2 கி.மீ., துாரமுள்ள தார்ச்சாலையை கீரைப்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, கூக்கடப்பட்டி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகவே, இச்சாலையில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் விளை பொருட்களை இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லும் விவசாயிகள் அவதியடைகின்றனர். சாலையை சீரமைக்கக்கோரி, அப்பகுதி கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சாலையை சீரமைத்து, புதிய தார்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒன்றிய கவுன்சிலர்கள்ஆலோசனை கூட்டம்தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம், ஒன்றிய குழு சேர்மன் பாஞ்சாலை தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, பி.டி.ஓ.,க்கள் சுருளிநாதன், ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், கோடை காலம் துவங்க உள்ள நிலையில் தட்டுப்பாடின்றி ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில், மாற்று ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர்கள் அழகுசிங்கம், முத்துசாமி, ஜோதி, சரண்யா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக பெருவிழாபாலக்கோடு அடுத்த, மேக்கலாம்பட்டி பாமாண்டி நகரில் மஹா கணபதி, நவகிரகம், முத்துமாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த, 22 அன்று கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று அதிகாலை திருப்பள்ளியெழுச்சி, திருச்சுற்றுக் கலச நீராட்டு, 4ம் கால வேள்வி நடந்தது. தொடர்ந்து, யாக சாலையிலிருந்த கலச தீர்த்தத்தை கோவில் கலசத்திற்கு ஊற்றி, திருக்குட நன்னீராட்டு நடந்தது.பின்னர், முத்துமாரியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து பூக்களால் அலங்கரித்து, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.தந்தை அஸ்தியை கரைத்த மகன் ஆற்றில் மூழ்கி பலிஊத்தங்கரை அடுத்த சென்னப்ப நாயக்கனுாரை சேர்ந்தவர் சுரேஷ்; இவருடைய மகன் சந்தோஷ்குமார், 22; இவர், டிப்ளமோ முடித்து விட்டு, போச்சம்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 3 நாட்களுக்கு முன், இவரின் தந்தை சுரேஷ் உயிரிழந்த நிலையில், அவரது அஸ்தியை கரைக்க, ஒகேனக்கல் காவிரியாற்றிற்கு, உறவினர்களுடன் நேற்று வந்துள்ளார். அப்போது ஆலம்பாடி பரிசல் துறை பகுதியில் அஸ்தியை கரைக்க காவிரியாற்றில் குளித்தபோது, ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.சம்பவ இடம் வந்த ஒகேனக்கல் தீயணைப்புத்துறையினர் சந்தோஷ்குமார் உடலை, 2 மணி நேரத்திற்கு பின் கண்டெடுத்தனர். ஒகேனக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கம்பைநல்லுார்ஸ்ரீராம் பள்ளியில்சர்வதேச அபாகஸ் போட்டிதர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச மற்றும் மாநில அளவிலான அபாகஸ் வேதி கணித போட்டி நடந்தது.இதில், 30-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஜூனியஸ் அகாடமி சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது. தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் தலைமை வகித்தார். ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன் தாளாளர் சாந்திவேடியப்பன் பள்ளி நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம் ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, ஸ்மார்ட் ஜூனியஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் சரண்குமார் செய்திருந்தார்.கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்அரூர் அடுத்த மாம்பாடியில், கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜை, தீர்த்தக்குடம் எடுத்தல், முளைப்பாரி, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை, யாகசாலை பூஜையும், கலசகுடம் எடுத்தலும், பின், மூலவருக்கு புனித தீர்த்தங்களால் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுநெடுஞ்சாலைத்துறையினர் பேரணிதர்மபுரி, மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். கலெக்ட்ரேட், செந்தில் நகர், இலக்கியம்பட்டி வழியாக சென்ற பேரணி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் நிறைவடைந்தது. இதில், வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும். ஆபத்தான வளைவுகளில் முந்தி செல்லக்கூடாது.போக்குவரத்து சிக்னல்களை மதிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, நெடுஞ்சாலைதுறை ஊழியர்கள் ஏந்தி பேரணியாக சென்றனர். வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், கோட்ட பொறியாளர் நாகராஜ், உதவி கோட்ட பொறியாளர்கள் ஜெய்சங்கர், விஜய், கவிதா, சண்முகம், கார்த்திகேயன், மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர் உள்பட பலர் பங்கேற்றனர்.வெங்கடரமணசுவாமி கோவில் கும்பாபிஷேக விழாகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வெங்கடேஷ் நகரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடரமண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த, 23ல், கலசபூஜை உள்ளிட்டவை நடந்தன.இதை தொடர்ந்து நேற்று காலை, 6:30 மணிக்கு திருமஞ்சனம், 8:30 மணிக்கு கலசபூஜை நிவேதனம் நடந்தது. தொடர்ந்து கோவில் பட்டாச்சாரியார்கள் யாகசாலையிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை, 10:20 மணிக்கு கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., செல்லகுமார், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, ஹிந்து அறநிலைத்துறை செயல் அலுவலர் சாமிதுரை, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கள்ளக்காதலன் காதை வெட்டியபெண்ணின் கணவர் கைதுகிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளப்பாடியை சேர்ந்தவர் தர்மேந்திரன், 44; இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த சரவணன், 41, என்பவரது மனைவி இலக்கியாவுடன் கள்ளத்தொடர்பால், கடந்த, 6 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.கடந்த சில வாரங்களுக்கு முன் இலக்கியா, தர்மேந்திரனையும் விட்டுவிட்டு, வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதையறிந்த சரவணன், கடந்த, 22ல் தர்மேந்திரன் வீட்டிற்கு சென்று, 'என் குடும்ப வாழ்க்கையை கெடுத்து, மனைவியை பிரித்து அழைந்து வந்தாய். தற்போது நீயும் நிம்மதியாக வாழ முடியாமல் போய் விட்டது' என, தகராறில் ஈடுபட்டார். பின், கத்தியால் அவரது காதை வெட்டியுள்ளார்.படுகாயமடைந்த தர்மேந்திரன், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிங்காரப்பேட்டை போலீசார், சரவணனை கைது செய்தனர்.வாக்காளர் தினஉறுதிமொழி ஏற்புகிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 14வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தொடர்ந்து டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்து விழிப்புணர்விற்கான நடமாடும் செயல்முறை விளக்க வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், தனி தாசில்தார் (தேர்தல்) ஜெய்சங்கர், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.தேசிய பெண்குழந்தைகள், கல்வியறிவு தினமாணவ, மாணவியர் விழிப்புணர்வு பேரணிதேசிய, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் வழிகாட்டுதல் படி, கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், தேசிய பெண்குழந்தைகள் தினம் மற்றும் சர்வதேச கல்வியறிவு தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய் பிரியா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய பேரணி, ராயக்கோட்டை சாலை வழியாக, மீண்டும் கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில் நிறைவுற்றது. இதில், அரசு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் என்.சி.சி., குழுவினர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பதாகைகளை ஏந்தி சென்றனர். குடும்ப நல நீதிமன்ற நீதிபதி நாகராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா, மாவட்ட அமர்வு நீதிபதி, சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, சிறப்பு சார்பு அஷ்வஹ் அகமது, முதன்மை சார்பு நீதிபதி மோகன்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி, திருமதி ஜெனிபர், மற்றும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்தராஜூலு, துணைத்தலைவர் ராமசந்திரன் மற்றும் சுரேகா, செயலாளர் சக்தியநாராயணன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.