| ADDED : நவ 19, 2025 02:20 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் இந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை:ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலால், இலைகளின் உட்பகுதியில் சுருள் சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் காணப்படும். இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள், ஓலைகளின் அடிபாகத்தில் கூட்டமாக சாற்றை உறிஞ்சி மரத்தின் வளர்ச்சியை பாதிக்கும். இவை வெளியேற்றும் தேன் போன்ற இனிப்பான திரவம், கீழே உள்ள இலைகளின் மேல்பகுதியில் விழுந்து பரவி கரும்பூசணம் வளர்வதால், ஓலைகள் கருப்பு நிறமாக மாறிவிடும். இதனால் தென்னை மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும். எனவே, பூச்சிக்கொல்லி மருந்து உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் ஆன ஒட்டு பொறிகள் ஏக்கருக்கு, 8 என்ற எண்ணிக்கையில், மரங்களுக்கு இடையில் தொங்கவிட்டு அல்லது தண்டுப்பகுதியில், 6 அடி உயரத்தில் சுற்றியும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த தாள்களை துணியால் சுத்தமாக துடைத்து, பின்பு ஒட்டும் பசையான விளக்கெண்ணையை பூச வேண்டும்.சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலின் கரும்பூசணத்தை கட்டுப்படுத்த, ஒரு கிலோ மைதாவை, 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, 20 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். வாழை அல்லது சீத்தா மரங்களை ஏக்கருக்கு, 20 என்ற எண்ணிக்கையில் வளர்ப்பதால், என்கார்சியா ஒட்டுண்ணிகளின் செயல்பாட்டை அதிகரிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.