| ADDED : பிப் 18, 2024 10:13 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று புத்தக திருவிழா தொடங்கியது. டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் வரவேற்றார். கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.,முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாவட்ட கலெக்டர் சரயு பேசியதாவது:பள்ளி மாணவர்கள் இங்கு அதிகமாக இருப்பது மகிழ்ச்சி. என் தந்தை ஒரு நுாலகர். அதனால் நான் சிறு வயதில் அதிக புத்தகங்களை படித்ததால், இன்று கலெக்டராக உங்கள் முன் நிற்கிறேன். ஆசிரியர்களிடம் திட்டு வாங்குவது, இப்போது கடினமாக இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் சிறந்த நிலையை அடையும் போதுதான், அதற்கான அர்த்தம் புரியும். புத்தக வாசிப்பு, தற்போது குறைந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், மாணவர்கள் பள்ளி பாடநுால்களுடன், இதர புத்தகங்களை படித்தால் மட்டுமே எதிர்காலத்தில் சிறக்க முடியும். பல்வேறு துறைகள் சார்பான புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன. பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தரமான புத்தகங்களை வாங்கி படித்து முன்னேற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, கிருஷ்ணகிரி நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.