மதுரை;மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான அ.தி.மு.க., வேட்பாளர் ராஜன் செல்லப்பா, நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். காலை 12.10மணிக்கு அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகம் வந்தனர். வேட்பாளர் ராஜன்செல்லப்பா உடன், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், எம்.எல்.ஏ.,க்கள் போஸ், முத்துராமலிங்கம், தமிழரசன் உடன் வந்தனர். தேர்தல் அலுவலர் நடராஜனிடம், இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக, அவர் மனைவி மகேஸ்வரி மனுத்தாக்கல் செய்தார்.சொத்து விபரம்: வேட்பாளர் பெயரில் 52 லட்சத்து 62 ஆயிரத்து 110 ரூபாய், மனைவி பெயரில் ஒரு கோடியே 18 லட்சத்து 75 ஆயிரத்து 469 ரூபாய்க்கு அசையா சொத்தும், தன் பெயரில் 13 லட்சத்து 59 ஆயிரத்து 478 ரூபாய், மனைவி பெயரில் 44 லட்சத்து இரண்டாயித்து 74 ரூபாய்க்கு அசையும் சொத்தும் வைத்திருப்பதாக கூறியுள்ளார். தம் மீது இரண்டு வழக்கு விசாரணை, மூன்று நிலுவை வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராஜன் செல்லப்பா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் முதன்மை மாநகராட்சியாக மதுரை மாற்றப்படும். மதுரை மேயருக்கான நேரடி வேட்பாளர் ஜெ., தான். தி.மு.க.,வினர் 15 ஆண்டாக சீரழித்த மாநகராட்சியை, இம்முறை மீட்போம். முடங்கி கிடக்கும் திட்டங்கள் முழுமைபெறும், என்றார்.