| ADDED : ஜூலை 28, 2024 07:02 AM
மதுரை : துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மலைப்பகுதி தொல்லியல் நினைவுச் சின்னத்தை பாதுகாக்க தண்ணீர், கழிப்பறை வசதிகள் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை நாகமலை புதுக்கோட்டை ஆறுமுகம் தாக்கல் செய்த பொதுநல மனு: பாதுகாக்கப்பட்ட தொல்லியல் நினைவுச் சின்னம் கழுகுமலை மலைப்பகுதி. இங்கு கழிப்பறை, மின் விளக்குகள், குடிநீர், பாதுகாப்பு, தகவல் பலகை உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்ற மத்திய, மாநில தொல்லியல்துறைகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவன் (தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி), நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இக்கோயிலின் கட்டடக்கலை அம்சங்கள் சிறப்பானவை. இதன் பழமை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசின் தொல்லியல்துறை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்தது. வரலாறு, கலாசாரம், பாரம்பரியமிக்க இடத்தை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகளை போதிய அளவு அமைக்க வேண்டும். குடிநீர் வசதி செய்ய வேண்டும். போதிய மின் விளக்குகள் இருக்க வேண்டும். திருட்டு அல்லது அத்துமீறி நுழைதல் அல்லது தொல்லியல் சின்னத்தின் தோற்றத்தை யாரும் சிதைப்பது நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். முறையான தகவல் பலகைகள் இடம்பெற வேண்டும். அப்பகுதியின் அழகியல் தோற்றத்தை அப்படியே பராமரிக்க வேண்டும். இவற்றை 6 மாதங்களில் நிறைவேற்றுவதை தமிழக தொல்லியல்துறை கமிஷனர், துாத்துக்குடி கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.