திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 5ம் நாள் திருவிழாவாக நேற்று 2 டன் எடையுள்ள வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருள கை பாரம் நிகழ்ச்சி நடந்தது.மார்ச் 15ல் துவங்கிய பங்குனி திருவிழாவில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். நேற்றிரவு சுவாமி, தெய்வானை 2 டன் எடையுள்ள வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினர். சீர்பாதங்கள், கிராமத்தினர், பக்தர்கள் உள்ளங்கைகளில் வாகனத்தை தலைக்கு மேல் துாக்கிக் கொண்டு கொத்தாளமுக்கு முதல் கோயில் வாசல் வரை ஓடினர். தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒரு முறை இத்திருவிழாவில் மட்டுமே நடக்கும். திருக்கல்யாணம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (மார்ச் 22) சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, மார்ச் 24ல் பங்குனி உத்திரம், 26ல் சூரசம்ஹாரம், 27ல் பட்டாபிஷேகம், 28ல் திருக்கல்யாணம், 29ல் தேரோட்டம், 30ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருமங்கலம் ஆர்.டி.ஓ., சாந்தி தலைமை வகித்தார். கோயில் துணை கமிஷனர் சுரேஷ், மண்டல தலைவர் சுவிதா, போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி, தீயணைப்பு அலுவலர் உதயகுமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சாலமன், சுகாதார அலுவலர் விஜயகுமார், ஆய்வாளர் முருகையா, மின் துறை உதவி பொறியாளர் சுங்களாதேவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன், கவுன்சிலர் சிவசக்தி, சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், சண்முகசுந்தரம், அஜித் கலந்து கொண்டனர்.