UPDATED : ஜூலை 04, 2024 03:13 AM | ADDED : ஜூலை 04, 2024 01:37 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு தானத்தை எதிர்பார்த்து நோயாளிகள் காத்திருப்பதால் உடல் உறுப்புகள் தானத்துடன் எலும்பு தானம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.மூளைச்சாவு நிலையை அடையும் நோயாளிகளின் உடலில் இருந்து கண்கள், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு, தோல் ஆகியவற்றை எடுத்து தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தலாம். மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு நோயாளிகளின் உடலில் இருந்து உறுப்புகள் தானம் பெறுவது அதிகரித்துள்ளது. உள்ளுறுப்புகள் எடுக்கப்படும் போது உடலின் வெளியே தெரிவதில்லை. ஆனால் எலும்பு, தோல் தானம் கேட்டால் உறவினர்கள் தயங்குகின்றனர். இவற்றை தானமாக பெற்ற பின் மீண்டும் உடலின் அதே நிலைக்கு வடிவமைக்கும் நவீன வசதிகள் உள்ளதால் தயங்காமல் தானம் செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவமனையின் முடநீக்கியல் துறைத்தலைவர் பதியரச குமார்.அவர் கூறியதாவது: விபத்தில் அடிபடும் சில நோயாளிகளுக்கு எலும்புகளின் பகுதிகள் கீழே விழுந்திருக்கும். அந்த இடத்தில் மீண்டும் எலும்பை ஒட்டவைத்து பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும். சிலருக்கு எலும்புகள் நொறுங்கியிருக்கும். அதை மாற்ற வேண்டும். எலும்பு, ஜவ்வு, தசைநார் என எந்த பகுதி சேதமடைந்துள்ளதோ அதை மாற்ற வேண்டும். அடிபட்டவரின் ஒரு காலுக்கு எலும்பை பொருத்துவதற்கு மற்றொரு காலையும் அறுவை சிகிச்சை செய்து அதற்கேற்ப எலும்பையோ, தசைநாரையோ எடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு வித அறுவை சிகிச்சை, வலியை தாங்க வேண்டும்.இதற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது தான் எலும்பு தானம். இறந்தவரின் உடலில் இருந்து கை, கால், தொடை, இடுப்பு எலும்புகள், ஜவ்வு, தசைநார்களை எடுத்து உயிரோடிருப்பவர்களுக்கு பொருத்த முடியும். எடுக்கப்படும் எலும்பு, ஜவ்வு, தசைநார்களை பெங்களூருவுக்கு அனுப்பி காமா கதிர்கள் மூலம் கதிரியக்க சுத்தம் செய்து மீண்டும் மதுரை அரசு மருத்துவமனை எலும்பு வங்கியில் மைனஸ் 180 டிகிரி குளிரில் பாதுகாக்கிறோம். இந்த எலும்புகளை கொண்டு 7 நோயாளிகளுக்கு ஒட்ட வைத்துள்ளோம். 3 பேருக்கு தசைநார் அறுவை சிகிச்சை, ஒருவருக்கு முதுகுத்தண்டுக்கும், 3 பேருக்கு எலும்பில் உண்டான கட்டியை அகற்றியதற்கும் அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.இறந்தவர்களின் உடலில் இருந்து எலும்புகளை எடுத்த பின் கை, கால்கள் தொய்வடையாத வகையில் நவீன பொருட்களை வைத்து தைத்து விடுவதால் தோற்றத்தில் மாற்றம் தெரியாது என்றார்.