மதுரை: மதுரையில் நேற்று நடந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் மடையின் ஷட்டர்கள் திருடப்பட்டதாகவும் விவசாய நிலத்தில் தரைமேல் குடிநீர் குழாய் பதித்ததாகவும் கண்மாய்க்குள் கழிவுநீர் விடப்படுவதாக விவசாயிகள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சக்திவேல், வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், கூட்டுறவு மண்டல இணை இயக்குநர் குருமூர்த்தி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:ராமச்சந்திரன், சொரிக்காம்பட்டி: திருமங்கலம் நீட்டிப்பு பிரதான கால்வாயின் 8, 9, 12 வது மடைகளில் உள்ள ஷட்டர்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அன்புச்செல்வன், செயற்பொறியாளர், நீர்வளத்துறை: கண்மாயின் வரத்து கால்வாயில் அனுமதி பெறாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.,) கட்டிய தடுப்பணையை அகற்ற திருமங்கலம் பி.டி.ஓ.,வுக்கு உதவி பொறியாளர் கடிதம் அனுப்பியுள்ளார். மடை திருட்டு குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.கலெக்டர்: நீர்வளத்துறை அனுமதியில்லாமல் எப்படி தடுப்பணை கட்டினீர்கள். பி.டி.ஓ., பதிலளிக்க வேண்டும்.ராஜா, உறங்கான்பட்டி: பெரியகுளம் கண்மாய் வாய்க்காலை 12 வது கால்வாய் 45வது மடை வழியாக நெடுஞ்சாலை இடத்தில் நீர்வளத்துறையினர் வரைபடத்தை மாற்றி பாசனத்தை திசை திருப்பியுள்ளனர்.சிவபிரபாகரன், செயற்பொறியாளர், மேலுார் பெரியாறு பிரதான கால்வாய்: பெரியகுளம் கண்மாய்க்கு 9வது கிளை வாய்க்கால் 13வது மடை மூலம் பாசன வசதி அளிக்க வழியில்லை. வரைபடத்தில் உள்ளவாறே பாசனம் நடைபெறுகிறது.கலெக்டர்: வரைபடத்தை எப்படி மாற்ற முடியும். நீர்வளத்துறை கொடுத்ததும் நீங்கள் கொடுத்ததும் ஒரே மேப் தான்.கோடீஸ்வரன், மேலுார்: அய்யாப்பட்டி ஊராட்சி ஒட்டக்கோவில்பட்டி கிழவன்குளத்தில் விவசாயத்திற்கு கண்மாய் தண்ணீர் திறக்காமல் தனிநபர்கள் மீன்வளர்க்கின்றனர்.கலெக்டர்: மீன்வளத்துறை அனுமதி இல்லாமல் மீன்வளர்க்க முடியுமா. மீன்வளத்துறை அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.சந்திரன், கோவிலுார்: அலங்காநல்லுார் குட்டிமேய்க்கிபட்டி பெரிய இலந்தைகுளம் ஊராட்சியில் தரைக்கு மேல் குடிநீர் குழாய் பதித்துள்ளதால் வயலில் இயந்திர நெல் நடவு செய்யமுடியவில்லை. அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை.பி.டி.ஓ., அலங்காநல்லுார்: குடிநீர் குழாய்களின் மீது இயந்திரம் மூலம் மண் மெத்தப்பட்டுள்ளது.கலெக்டர்: அதெப்படி தரைக்கு மேலே குடிநீர் குழாய் பொருத்தமுடியும். நெடுஞ்சாலை துறை கொடுத்த ரூ.7 லட்சம் என்னவானது. தனியாக 'பவர் ரூம்' கட்டி கொடுத்துள்ளனர். பைப் லைனை ஏன் தரைக்கு மேலே அமைத்தீர்கள். உடனடியாக இப்பிரச்னையை சரிசெய்ய வேண்டும்.முத்துமீரான், பேரையூர்: பேரையூர் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை அதிகமாக வழங்க வேண்டும்.சுப்புராஜ், வேளாண் இணை இயக்குநர்: விதைப்பண்ணை மூலம் கொள்முதல் செய்யப்படும் சான்று விதைகளையே விதைக்காக வழங்க முடியும். சிறுதானிய விதைப்பண்ணை அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.ராமன், நடுமுதலைக்குளம்: கோச்சடையில் உள்ள அபார்ட்மென்ட்டின் 600 குடியிருப்புகளின் கழிவுநீரும் கோச்சடை கண்மாயில் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.சேகரன், உதவி பொறியாளர்: நீர்வளத்துறை சார்பில் கண்மாய்க்கு வரும் கழிவுநீர் பாதையை இரண்டு முறை அடைத்து விட்டோம். மீண்டும் திறந்து கழிவுநீரை வெளியேற்றுகின்றனர்.கலெக்டர்: நீர்வளத்துறை சார்பில் அபார்ட்மென்ட் மீது போலீசில் புகார் கொடுங்கள். பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படுத்தாத அபார்ட்மென்ட் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.பழனி, மேல உரப்பனுார்: பயிர்க்கடன் திரும்ப செலுத்துவதை ஓராண்டாக நீட்டிக்க வேண்டும்.குருமூர்த்தி, இணைப்பதிவாளர், கூட்டுறவுத்துறை: தற்போது தான் 6 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக நீட்டித்துள்ளோம். மீண்டும் உடனடியாக செயல்படுத்த முடியாது. மேலுாரில் இருபோக சாகுபடி நடைபெறுவதால் கடனை அடைத்த பின் பயிர்க்கடன் பெறலாம்.மாரிச்சாமி, மாடக்குளம்: நிலையூர் கால்வாயில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்காவிட்டால் சந்தோஷப்படுவோம். விளாச்சேரியில் இருந்து அவ்வளவு கழிவுநீரும் கால்வாயில் கலக்கிறது. மாடக்குளம் கண்மாய்க்கு ஏற்குடி அச்சம்பத்தில் இருந்து கால்வாய் வழியாக கழிவுநீர் கலக்கிறது. 2009 முதல் இப்பிரச்னையை கூறிவருகிறேன்.கலெக்டர்: உங்கள் வேதனை புரிகிறது. போதுமான நிதிஆதாரம் இல்லாததால் சில திட்டங்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. விரைவில் பிரச்னை சரிசெய்யப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.