உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரைக்கு முதல்வர் அறிவித்த 6 திட்டங்கள்

 மதுரைக்கு முதல்வர் அறிவித்த 6 திட்டங்கள்

மதுரை: மதுரை உத்தங்குடியில் 1.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கல், புதிய, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் துவக்க விழாவில், மதுரை வளர்ச்சிக்கான மேலும் 6 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் மேடையில் அறிவித்தார். மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வைகை ஆற்றின் வடகரையில் விரகனுார் ரிங்ரோடு முதல் சக்குடி வரை 8.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ. 130 கோடியில் புதிய ரோடு அமைக்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், புதுார், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்குவாசல், எஸ்.எஸ்.காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் தற்போதுள்ள பழைய பாதாளச் சாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை கிழக்கு தாலுகா உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில் ரூ. 7 கோடி செலவில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலூர் தாலுகா கேசம்பட்டி - பெரிய அருவி நீர்த்தேக்கம், அதைச் சார்ந்த கண்மாய்கள் ரூ.2.60 கோடியில் புனரமைக்கப்படும். மேலும் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.9.50 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும். மதுரை மேற்கு தாலுகா கொடிமங்கலம், மேலமாத்துார், புதுக்குளம், விளாச்சேரி கிராமங்களில் உள்ள பல்வேறு ஏரிகள், கால்வாய்கள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும். விழாவில் பங்கேற்றவர்கள் வாடிப்பட்டி தாலுகா, அலங்காநல்லூர் ஒன்றியத்தில் சாத்தையாறு அணை - வைகாசிப்பட்டி, முடுவார்பட்டி - சல்வார்பட்டி, பாலமேடு - வேம்பரலை ஆகிய ரோடுகள் ரூ. 1.50 கோடியில் வனத்துறை அனுமதி பெற்று மேம்படுத்தப்படும் என்றார். விழாவில் அமைச்சர்கள் நேரு, ஏ.வ.வேலு, சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தியாகராஜன், பெரியகருப்பன், எம்.பி.,க்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.பாலாஜி (வடக்கு தி.மு.க.,), மா.ஜெயராம் (நகர் தி.மு.க.,), ம.தி.மு.க., நகர் மாவட்ட செயலாளர் முனியசாமி பங்கேற்றனர். டி.ஆர்.ஓ., அன்பழகன் நன்றி கூறினார்.

முதல்வர் நடத்திய 'கேட் வாக்'

n நலத்திட்ட விழா நடந்த இடத்திற்கு காலை 11:50 மணிக்கு நுழைந்த முதல்வர் ஸ்டாலின், அரங்கு நடுவே அமைக்கப்பட்ட பாதையின் இருபுறமும் உள்ள பயனாளிகளுக்கு கை கொடுப்பதும், மனுக்கள் வாங்கியபடியும் மேடை வரை 'கேட் வாக்' பாணியில் நடந்து வந்தார். n பெண்கள் பலர் ஆர்வமுடன் முதல்வருடன் 'செல்பி' எடுத்தனர். ஒரு பெண்ணிடம் அலைபேசியை வாங்கி ஸ்டாலினே 'செல்பி' எடுத்துக் கொடுத்தார். நுழைவு வாயிலில் இருந்து மேடைக்கு வருவதற்கு 25 நிமிடங்கள் வரை ஆனது. n முதல்வருக்கு ஜல்லிக்கட்டு காளை சிலையை அமைச்சர் மூர்த்தி பரிசளித்தார். n மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் என்பதற்கு பதில் 'சந்திரா தேவி' என முதல்வர் குறிப்பிட்டார். n பயனாளிகள் அரசு, தனியார் பஸ்கள், வேன்களில் விழாவிற்கு அழைத்து வரப்பட்டனர். இதனால் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் முதல் ஒத்தக்கடை, பாண்டிகோவில் ரிங்ரோடு பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வாகனங் களாக காட்சியளித்தன. n விழா அரங்கு நுழைவு பகுதியில் செயற்கை நீரூற்று வசதியுடன் கூடிய இயற்கை புற்களால் ஆன பிரமாண்ட பசுமை பூங்கா பார்வையாளர்களை கவர்ந்தது. n மேலமடை பாலத்தை திறப்பதற்கு முன் பந்தல்குடி கால்வாய் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மூர்த்திக்கு முதல்வர் பாராட்டு

விழாவில் ஸ்டாலின் பேசுகையில், அமைச்சர் மூர்த்தி ஏற்பாடு செய்த இவ்விழாவின் பிரமாண்டத்தை பார்த்து வியப்பாக உள்ளது. சித்திரை திருவிழாவில் தான் மதுரையே குலுங்கும் அளவுக்கு கூட்டம் கூடும். அதுபோல இந்த அரசு விழாவும் மக்கள் கூட்டத்தால் குலுங்கும் அளவிற்கு மூர்த்தி ஏற்பாடு செய்தது பாராட்டுக்குரியது. இதே பாணியில் அவரது பணி தொடரட்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை