உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வண்டியூர், தென்கால் கண்மாய்களில் மேம்பாலம் ரோடு பணிக்கு தடை தொடரும்: உயர்நீதிமன்றம்

வண்டியூர், தென்கால் கண்மாய்களில் மேம்பாலம் ரோடு பணிக்கு தடை தொடரும்: உயர்நீதிமன்றம்

மதுரை, : மதுரை வண்டியூர் கண்மாயில் மேம்பால பணி, தென்கால் கண்மாயில் சாலைப் பணியை நிறுத்தி வைக்க பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீட்டித்தது.மதுரை வழக்கறிஞர் மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டிலிருந்து கோமதிபுரம் வரை 2.1 கி. மீ., துாரம் ரூ.150.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தமிழக நெடுஞ்சாலைத்துறை துவங்கியது. இதற்காக வண்டியூர் கண்மாயை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் கண்மாயில் தண்ணீர் தேக்க இயலாத நிலை ஏற்படும். திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கும், வண்டியூர் கண்மாயில் மேம்பாலம் கட்டுமான பணிக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு ஏற்கனவே விசாரித்தது.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: மதுரை 50 ஆண்டுகளில் பல நீர்நிலைகளை இழந்துள்ளது. இரு கண்மாயிலும் மேற்கொள்ளப்படும் பணிக்கு இடைக்கால தடை விதிக்கிறேன்.நீதிபதி பி.புகழேந்தி: மதுரை - திருமங்கலம் இடையே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தென்கால் கண்மாய்க்கரை வழியாக புதிய இருவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. வண்டியூர் கண்மாயில் தடுப்புச் சுவர்களை உயர்த்தி, தடுப்பணை பலப்படுத்தப்படுகிறது. கண்மாயில் நீரை சேமிப்பது பாதிக்கப்படாது. இடைக்கால தடை உத்தரவு வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவ்வாறு உத்தரவிட்டனர்.இருவரும் மாறுபட்ட நிலைப்பாடு எடுத்ததால் தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி மூன்றாவது நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் ஜன.,18ல் மனு விசாரணைக்கு வந்தது.நீதிபதி: ஜன.,22 ல் இரு கண்மாய்களிலும் ஆய்வு செய்வேன். விசாரணை ஜன.,23க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இரு கண்மாய்களிலும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார். நேற்று முன்தினம் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி, எம்.தண்டபாணி இரு கண்மாய்களிலும் ஆய்வு செய்தனர்.நேற்று விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி: கண்மாய்களை பார்த்தபோது வருத்தமடைந்தேன். கண்மாய் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. அனைத்து உயிரினங்களுக்குமானது. அதில் கட்டுமானப் பணி மேற்கொள்வது எனக்கு திருப்தியளிக்கவில்லை. மூன்றாவது நீதிபதி என்ற முறையில் இவ்வழக்கில் எனது தரப்பில் ஜன.,29ல் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பேன். அதுவரை ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு தொடரும். இவ்வழக்கை ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கும். இவ்வாறு கருத்து வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை