| ADDED : டிச 08, 2025 06:09 AM
மதுரை: மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் இதய இயக்க, சுவாச மீட்பு மாநாடு தொடக்க விழா மதுரையில் நடந்தது. அமைப்புக் குழுத் தலைவர் டாக்டர் நரேந்திர நாத் ஜெனா தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் மாநாடு நினைவு மலர் வெளியிடப்பட்டது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் பேசியதாவது: மருத்துவத் துறையில் புதுமைகளைப் புகுத்துவது, உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதன் வழி மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் உயிர் காக்கும் சிகிச்சை முறைகளையும், தரநிலைகளையும் மேம்படுத்த இம்மாநாடு உதவும். ஒவ்வொரு அமர்வும் மாறுபட்ட, புதுமையான சிந்தனையைத் தூண்டுவதற்கும், பல்வேறு துறைகளுக்கு இடையிலான உரையாடலை வளர்ப்பதற்கும், இதய இயக்க, சுவாச மீட்புக்கான அறிவியலில் அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதற்கும் உதவுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். டாக்டர் ராஜா சபாபதி, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஆசிய - பசிபிக் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ஜான் கிம், சர்வதேச செயல்திட்ட நிர்வாகி மரிடா ஸ்ட்ராச்சியா, மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன் பங்கேற்றனர். மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆராய்ச்சி மையம், தி இந்தியன் காலேஜ் ஆப் எமர்ஜென்சி மெடிசின் அமைப்புகள் ஏற்பாடு செய்தனர்.