| ADDED : டிச 01, 2025 05:47 AM
மதுரை: தமிழக அரசு உள்ளாட்சி மன்றங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க முன்வந்துள்ளது. தேர்வு செய்யப்படுவோர் தவிர, மாற்றுத்திறனாளி ஒருவரை கூடுதலாக நியமிக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார். சிலமாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அரசு உத்தரவிட்டது. தற்போது ஊராட்சி, ஒன்றியங்களில் மன்றங்கள் இல்லாததால் உறுப்பினர் நியமனம் நடக்கவில்லை. மதுரை மாநகராட்சியில் சுந்தரேசன், நகராட்சிகளில் திருமங்கலம்- சிங்கத்தேவர், மேலுார் - நாகலட்சுமி, உசிலம்பட்டி- ரமேஷ். பேரூராட்சிகளில் பரவை-நாகரத்தினம், டி.கல்லுப்பட்டி-முத்துசாமி, சோழவந்தான்-வேணுகோபால், வாடிப்பட்டி - ராஜா, அலங்காநல்லுார் - கங்காமீனா, பாலமேடு - அமுதா, எழுமலை-செல்வம், பேரையூர்-பழனிசாமி, ஏ.வள்ளாலபட்டி-மனோன்மணி நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமை சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன், துணை செயலாளர் குமரவேல் கூறுகையில், ''மதுரையில் நியமன குழுவில் மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளை அழைக்காமல், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரை வைத்து தேர்வு செய்துள்ளனர். இதனை கண்டித்து டிச.1ல் போராட்டம் நடத்துவோம்'' என்றார். கலெக்டர் பிரவீன்குமாரிடம் கேட்டபோது, ''அரசின் உத்தரவுபடி நியமன நடந்தது. சங்கத்தினர் மனு அளித்தால் அரசுக்கு அனுப்பி வைப்போம்'' என்றார்.