| ADDED : நவ 16, 2025 03:26 AM
மதுரை: ''கபடியை ஒலிம்பிக்கில் சேர்க்க முயற்சி நடக்கிறது,'' என சென்னை கபடி வீராங்கனை கார்த்திகா கூறினார். தமிழகத்தின் பல பகுதிகளில் கபடி போட்டியில் காயமடைந்த 8 பேர் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர் கபடி வீராங்கனை சென்னை கார்த்திகா மற்றும் கபடி வீரர் அபினேஷ். தமிழக அமெச்சூர் கபடி சங்க தலைவர் சோலை ராஜா, மருத்துவமனை முதன்மை நிர்வாக அதிகாரி மணிவண்ணன் வரவேற்றனர். கார்த்திகா கூறியதாவது: வேலம்மாள் மருத்துவமனையில் காப்பீடு திட்டத்தின் கீழ் 66 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ சேவைகள் அதிகம் செய்திருந்தாலும், கபடி வீரர்களுக்கான மருத்துவ சேவையில் முதலிடத்தில் உள்ளது. விளையாட்டில் ஆண், பெண் பாகுபாடு இல்லை. யாரும் அப்படி பார்க்கவில்லை. அனைவரும் சமமாகத்தான் பார்க்கின்றனர். கபடி வீரர்களுக்கு இலக்கு, ஒழுக்கம்தான் முக்கியம். கபடி போட்டி தேசிய அளவில் விளையாடப்படுகிறது. ஒலிம்பிக்கில் சேர்க்க முயற்சி நடக்கிறது. தமிழகத்திற்காக 11 முறை விளையாடி 8 முறை பதக்கங்கள் வென்றுள்ளேன் என்றார். வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் கூறியதாவது: வேலம்மாள் கல்வி குழுமம் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. கபடி போட்டியில் உலக அளவில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் கார்த்திகா, அபினேஷ் சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றார்.