உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் கேலோ இந்தியா போட்டிகள் விளையாட்டு அதிகாரிகள் சொதப்பல்

மதுரையில் கேலோ இந்தியா போட்டிகள் விளையாட்டு அதிகாரிகள் சொதப்பல்

மதுரை : மதுரையில் நடக்கும் 'கேலோ இந்தியா' தேசிய விளையாட்டு போட்டிகளில் போதிய திட்டமிடல் இல்லாததால் வீரர்களுக்கு சாப்பாடு வழங்குவது முதல் வெற்றி அணிகளை அறிவிப்பது வரை அதிகாரிகள் சொதப்புவதாக சர்ச்சை எழுந்துள்ளது.சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் இப்போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் நடக்கின்றன. இதில் 17 முதல் 21 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் முதல் போட்டியாக பஞ்சாப் பாரம்பரிய விளையாட்டான கட்கா போட்டிகள் துவங்கின. ஜன.,25 முதல் 30 வரை கோ -கோ போட்டிகள் நடக்கின்றன. இதற்காக வந்துள்ள பஞ்சாப், ஹரியானா, உ.பி., மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகம் உட்பட 16 மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் மதுரையில் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ.,), பிட் இந்தியா அமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் (எஸ்.டி.ஏ.டி.,) இணைந்து செய்து வருகிறது.ஆனால் மதுரையில் எஸ்.ஏ.ஐ., அதிகாரிகளுக்கு மொழிப்பிரச்னை உள்ளதாகவும், போட்டிகளை நடத்துவதில் உரிய ஒத்துழைப்பை எஸ்.டி.ஏ.டி., அதிகாரிகள் அளிப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக போட்டி துவங்கிய முதல் நாளே வீரர்களுக்கு உரிய சாப்பாடு ஏற்பாடு செய்யவில்லை என்பது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்தன.போட்டிகளை துவக்கி வைத்த கலெக்டர் சங்கீதாவிடம் வீரர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. உரிய விசாரணை நடத்த உத்தரவிட்ட பின் தற்போது ஓரளவு நிலைமை சீராகியுள்ளது.கட்கா விளையாட்டுகளுக்கான உள்விளையாட்டு அரங்கம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தடகள வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக ரூ.4 கோடியில் உருவாக்கப்பட்ட சிந்தட்டிக் ஓடுதள மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு லேயருக்கு மேல் விரிக்கப்பட்ட 'மேட்' சரியில்லாததால் சில இடங்களில் வீரர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர்.இதுகுறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: இப்போட்டிகள் நடப்பது மதுரைக்கு பெருமை. 16 மாநிலங்களின் வீரர்கள் வந்துள்ளனர். சாப்பாட்டு பிரச்னை போல் தற்போது வரை குடிநீர், வீரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகள் என எல்லாமே பிரச்னையாக உள்ளன. இதை கவனிக்க வேண்டிய எஸ்.டி.ஏ.டி., மாவட்ட அதிகாரிகள் எங்கே உள்ளனர் என்பதே தெரியவில்லை. தினம் வெற்றி பெறும் அணிகள் குறித்த முடிவுகள் அறிவிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது. நாளிதழ்களுக்கு தெரிவிக்க உரிய ஏற்பாடும் செய்யவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உத்தரவிட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை